உத்தரப் பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கிய செக் (காசோலை) பவுன்ஸ் ஆனது.
உத்தரப்பிரதேச மாநிலம், பாரபங்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அலோக் மிஸ்ரா. இவர், சமீபத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 93.5 சதவீத மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 7-ஆவது இடம்பிடித்தார்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் கடந்த மாத இறுதியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், அலோக் மிஸ்ராவை பாராட்டி ரூ.1 லட்சத்திற்கான காசோலையை யோகி ஆதித்யநாத் வழங்கினார்.
தொடர்ந்து, அந்த காசோலையை ஹஸ்ரத்கஞ்ச் பகுதியிலுள்ள தனியார் வங்கியில் அலோக் மிஸ்ரா சமர்ப்பித்துள்ளார். எனினும், அடுத்த 2 நாள்களில் அந்த காசோலை பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அலோக் மிஸ்ரா, இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தார்.
அப்போது அந்த காசோலையில் காணப்பட்ட பாரபங்கி மாவட்ட பள்ளிகள் கண்காணிப்பாளர் ராஜ்குமார் யாதவின் கையெழுத்து ஒத்துப்போகாதது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அலோக் மிஸ்ராவுக்கு புதிய காசோலை வழங்கப்பட்டது. முன்னதாக செக் பவுன்ஸ் ஆனதற்காக, அந்த வங்கி சார்பில் அலோக் மிஸ்ராவிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
No comments:
Post a Comment