Friday, 10 August 2018

Tamilrockers: தமிழ்ராக்கர்ஸ் எவ்வாறு படங்களை திருடுகின்றனர்?

பிரபல நட்சத்திரங்களின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் தமிழ்ராக்கர்ஸ்ஸூம் பிசியாகி கோலிவுட்டுக்கு தலைவலியாக இருந்து வருகின்றனர். திரைப்படங்களை திருடி இணையதளங்களில் தெறிக்க விட்டு விடுகின்றனர்.

இதனால், படம் வெளியாவதற்கு முன்பிருந்தே இணையத்தில் திருட்டுத்தனமாக படம் வெளியாகாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக்கு தமிழ் திரையுலகம் தள்ளப்பட்டுள்ளது. பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகிறது. குறிப்பாக இவர்களது படங்கள் இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் வெளியாகி விடுகிறது. அங்கிருந்து இந்தப் படங்களை தியேட்டர்களில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு விடுகின்றனர் தமிழ்ராக்கர்ஸ்.

தமிழ்ராக்கர்ஸில் வெளியானது விஸ்ரூபம் 2!

இதைத்தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ''ஆன்டி பைரசி செல்'' செயல்படுகிறது. இந்த அமைப்பும் சமீபத்தில் கோயம்புத்தூர் மற்றும் மலேசியாவில் காலா படத்தை தியேட்டர்களில் திருட்டுத்தனமாக பதிவு செய்தவர்களை கையும் களவுமாக பிடித்தது.

தென்னிந்திய மொழிகளில் திருட்டு:
கோயம்புத்தூரில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சர்வதேச அளவில் இயங்கி வந்ததும் தெரிய வந்தது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் இவர்கள் திருட்டுத்தனமாக படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்ததும் தெரிய வந்தது.

ஒவ்வொரு முறையும் இவர்கள் வெவ்வேறு இணையத்தின் பெயரில் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவதால், இவர்களை கண்டறிவதும் சிக்கலாக உள்ளது. கிக்காஸ் டோரன்டோ என்ற இணையமும் இந்த வேலையைத்தான் செய்து கொண்டு இருந்தது. இதன் உரிமையாளர் ஆர்டம் வவ்ளின் போலந்தில் கைது செய்யப்பட்டபோது, தமிழ்ராக்கர்ஸ் சுதந்திரமாக உலவி வந்தனர். சர்வதேச அளவில் தமிழ்ராக்கர்ஸ் கொடி பறக்கத் துவங்கியது.

எவ்வாறு படங்களை திருடுகின்றனர்?
* படத்தின் தயாரிப்பாளர் சில தேர்வு செய்யப்பட்ட தியேட்டர்களில் ரிவியூவ் என்ற பெயரில் படங்களை திரையிடுகின்றனர்
* தமிழ்ராக்கர்ஸ் அமைப்பில் இருந்து சிலர் தியேட்டர் ஸ்கிரீனிங் ஏஜென்ட் அல்லது திரையரங்கு ஊழியர்களை தொடர்பு கொள்வார்கள்
* திருட்டுத்தனமாக படத்தை பிரின்ட் எடுக்க ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பார்கள்

இப்படியும் செய்வார்கள்... World Film Distribution (W.F.D)
* 2 அல்லது 3 சர்வர்களில் படத்தை பதிவேற்றம் செய்வார்கள்
* படத்தை 2 அல்லது 4 பாகங்களாக பல்வேறு சர்வர்களில் சேமித்து வைப்பார்கள்
* படம் துவங்குவதற்கு முன்பு இந்த சர்வருக்கும், தியேட்டருக்கும் லிங்க் கொடுத்து விடுவார்கள்.
* சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பல ஸ்கிரீன்கள் காட்டப்படும். அந்த சமயங்களில் தியேட்டர் ஊழியரிடம் அதிக பணம் லஞ்சமாகக் கொடுத்து, லேப் டாப்பில் பதிவு செய்வார்கள். ஆபரேட்டரும் ஒரு லிங்கை புரஜெக்டருக்கும், மற்றொரு லிங்கை லேப் டாப்பிற்கும் கொடுத்து விடுவார். பல ஸ்கிரீன்கள் காட்டப்படுவதால் சந்தேகமும் வராது.

திருட்டில் மூன்றாம் விதம்:
* கேமரா அல்லது செல்போன் வழியாக பதிவு செய்யப்படும்
* மெட்ரோ நகரங்களில் இது நடப்பதில்லை. இரண்டாம் தர நகரங்களில் மட்டுமே நடக்கிறது

இந்தியாவில் அதிகம்...
திருட்டுத்தனமாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் படங்களை இந்தியாவில் அதிகளவில் பார்க்கின்றனர். இந்தியாவில் தான் அதிகளவில் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்யப்படும் படங்களை பதிவிறக்கம் செய்கின்றனர்.

இந்தியாவில் பாகுபலி, தெறி, தில்வாலே, சுல்தான் ஆகிய படங்கள் அதிகளவில் பதிவிறக்கம் செய்து பார்க்கப்பட்டுள்ளது.

வருமானம்:
popAds, popMyAds, Propeller Ads Media, Dynamic Oxygen, Exit Junction, Blacklabelads, BuzzBizz இவர்கள்தான் திருட்டுத்தனமாக இயங்கும் தமிழ்ராக்கர்ஸ் போன்றவர்களை ஊக்குவித்து வருமானம் ஏற்படுத்திக் கொடுப்பவர்கள். ஒரு கிளிக்கிற்கு இவ்வளவு வருமானம் என்று நிர்ணயிக்கப்படுகிறது. கூகுள் ஒருபோதும் திருட்டு செய்திகளை விளம்பரப்படுத்தாது.

From Samayam

அபாய அளவை தாண்டியதால் இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறப்பு: வினாடிக்கு 7 லட்சம் லிட்டர் நீர் வெளியேற்றம்

இடுக்கி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 2401.6 அடியை கடந்தது. இதனால் அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து வினாடிக்கு 7 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதுபோலவே செருதோணி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. வெள்ள நீர் அடுத்த சில மணிநேரத்தில் எர்ணாகுளம் மாவட்டத்துக்குள் வரும் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பெரியாறு படுகையில் உள்ள 10 ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ராணுவத்துடன், கப்பல் படை மற்றும் கடலோரா காவல்படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.
பெரிய அணை
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது இடுக்கி அணை. குறவன் மலை, குறத்தி மலை ஆகிய இரு அணைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று, பெரியாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது.
வளைவு வடிவ அணைகளில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரியது இடுக்கி அணை. கடந்த 1969-ம் ஆண்டு அணைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு இடுக்கி அணை வந்தது.
இந்த அணையின் மொத்த உயரம் 550 அடி உயரமாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், இடுக்கியில் உள்ள மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப் பயன்படுகிறது. இந்த நீர்மின் நிலையத்தில் இருந்து 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 72 டிஎம்சி ஆகும்.
இந்த அணையின் மொத்த தண்ணீரும் மின்சாரம் எடுக்கப்பட்ட பின்பு, வேறு எந்த விவசாய பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுவதில்லை. உபரி நீர் முழுவதம் மொத்தமாக சென்று கடலில் கலந்து விடுகிறது. இடுக்கி அணையில் தற்போதுள்ள 72 டிஎம்சி நீரும் கடலில் சேன்று வீணாக கலக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு இரவு வந்துசேருகிறது காவிரி நீர்; உஷார் நிலை

கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் அதிகஅளவு தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக கனமழை பெய்தது. இதனால் அதிக நீர்வரத்து காரணமாக ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் வேகமாக நிரம்பின. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்ப‌ட்டது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
கடந்த சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால், அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்த‌து. கடந்த செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 429 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 118.61 அடியாகவும், நீர் இருப்பு 91.27 டிஎம்சியாகவும், நீர் திறப்பு விநாடிக்கு 18 ஆயிரத்து 300 கனஅடியாகவும் இருந்தது.
இந்நிலையில், கர்நாடகாவில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரத்து 969 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 28 ஆயிரத்து 300 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.85 அடியாகவும், நீர் இருப்பு இருப்பு 88.53 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து பாசன கால்வாய்களுக்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடகாவில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று இரவு மேட்டூர் அணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என தெரிகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
THE HINDU

6 மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் பயணத்துக்கு தடை

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரியில் அதிக அளவில் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் பயணத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 8,311 கனஅடியாகவும், நீர்மட்டம் 117.50 அடியாகவும், நீர் திறப்பு விநாடிக்கு 20,000 கனஅடியாகவும் இருந்தது. இந்நிலையில், கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கர்நாடக மாநிலம் கபினியில் இருந்து விநாடிக்கு 70,000 கன அடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 60,000 கனஅடி நீரும் காவிரியில் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில், கபினியில் திறக்கப்பட்ட நீர் 9-ம் தேதி (நேற்று) நள்ளிரவுக்குள் மேட்டூரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேஆர்எஸ் அணையில் திறக்கப் பட்ட நீர் இன்று (10-ம் தேதி) இரவு மேட்டூரை வந்தடைய வாய்ப்புள் ளது. எனவே, மேட்டூர் அணை இன்று மீண்டும் 120 அடியை எட்டும் என்றார்.
இந்நிலையில், மேட்டூர் அணை யில் இருந்து நீர் திறப்பு நேற்று மாலை விநாடிக்கு 30,000 கனஅடி யாக அதிகரிக்கப்பட்டது. இதனால், 2 வாரங்களுக்கு பின்னர் மீண் டும் 16 கண் மதகு வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது. இதற் கிடையில், சேலம் மாவட்ட நிர் வாகம் மேட்டூர் மற்றும் காவிரி கரை யோரக் கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி, ஆற்றில் குளிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தடைவிதித்துள்ளார். பரிசல் போக்குவரத்தும் தடை செய்யப் பட்டுள்ளது. மத்திய நீர் ஆணை யத்தின் தென்னிந்திய ஆறுகள் பிரிவு செயற்பொறியாளர் ஆர்.சரவ ணன், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சா வூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சி யர்களுக்கு அனுப்பியுள்ள வெள் ளம் தொடர்பான எச்சரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீர், அடுத்த 2 நாட் களுக்குள் மேட்டூர் ஆணையை வந்தடையும்போது அதன் அளவு விநாடிக்கு ஒரு லட்சம் கன அடியை தாண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதனால் சம்பந் தப்பட்ட மாவட்டங்களில் தாழ் வான பகுதிகளில் உரிய முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மைத் துறை ஆணை யர் சத்யகோபாலிடம் கேட்ட போது, “இதற்கு முன்பு மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் வந்து கொண்டிருந்தபோது, காவிரி கரையோர மாவட்ட ஆட்சியர் களுக்கு, உரிய பாதுகாப்பு நட வடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதே போன்று தற்போதும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
தமிழகத்துக்கான மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
கேரள மாநிலம் மற்றும் தெற்கு கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளது. அதன் காரணமாக மேற்குதொடர்ச்சி மலையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மண நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும், இதர தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 17 செமீ, சின்னகள்ளாரில் 12 செமீ, தேனி மாவட்டம் பெரியாரில் 12 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 10 செமீ, கோவை மாவட்டம் பொள்ளாச்சி, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கூடலூர் சந்தை ஆகிய இடங்களில் 7 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது என்று கூறினர்.

திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்; மு.க.அழகிரிக்கு முக்கிய பதவி

செப்டம்பர் முதல் வாரத்தில் நடக்கவுள்ள திமுக பொதுக் குழுவில் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த 2016 டிசம்பர் 1-ம் தேதி முதல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார். மூச்சு விடுவதை எளிதாக்க டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டதால் அவரால் பேச முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, கடந்த 2017 ஜனவரி 4-ம் தேதி நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு கட்சியின் அனைத்து முடிவுகளையும் ஸ்டாலினே மேற்கொண்டார்.
சுமார் 19 மாதங்கள் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த கருணாநிதி, கடந்த ஜூலை 27-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 11 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கடந்த 7-ம் தேதி காலமானார். கருணாநிதி மறைவையடுத்து திமுகவுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய அண்ணா, 1949 செப்டம்பர் 17-ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) என்ற புதிய அமைப்பை தொடங்கினார். பின்னர் அரசியல் கட்சியாக மாறி 1957 முதல் தேர்தலில் திமுக போட்டியிட்டு வருகிறது. அப்போது திமுகவில் தலைவர் பதவி இல்லை. பொதுச்செயலாளராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகள் திமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்த அண்ணா 1969-ல் காலமானார். அதன்பிறகு திமுகவில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. 49 ஆண்டுகள் தலைவராக இருந்து திமுகவை கட்டுக்கோப்புடன் வலிமை மிக்க கட்சியாக நடத்தி வந்த கருணாநிதி 19 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்துள்ளார். 1969-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி திமுக தலைவராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த நிலையில் மறைந்துள்ளார்.
இதையடுத்து, செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், திமுகவின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். இது தொடர்பாக திமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ''மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டமும், படத் திறப்பு விழாவும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் விரைவில் நடக்க உள்ளது. அதன்பிறகு ஆகஸ்ட் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடத்தப்பட உள்ளது. அதில் அண்ணா, கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட இருக்கிறார்'' என்றார்.
ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு இருவருக்கும் இடையே எவ்வித சமாதானமும் ஏற்படவில்லை. ஆனால், கருணாநிதி மருத்துவமனையில் இருந்த 11 நாட்களும் அழகிரி, ஸ்டாலின் இருவரும் பலமுறை பேசியுள்ளனர். அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, அழகிரிக்கும் திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமராவதி அணையின் இன்றைய நிலவரம்

தேதி : 10.08.2018
இருப்பு : 87.90 அடி
வரவு  : 1870 கன அடி
வெளியேற்றம் : 1870 கன அடி
ஆறு : 1855 கன அடி
வாய்க்கால் : 0 கன அடி

சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என எச்சரிக்கை

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித்தீர்த்து வருவதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தர தடை விதிக்கப்பட்டுள்ளது. 
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 26 பேர் பலியாகி இருப்பதாக மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதில் இடுக்கி மாவட்டத்தில் 13 பேர் இறந்துள்ளனர். தேவிகுளம் தாலுகாவில் உள்ள அடிமாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர், இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இருவர் தேவிகுளம் தாலுகாவில் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். இடுக்கி தாலுகாவிலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 
மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும், கண்ணூரில் 3 பேரும், வயநாடு மாவட்டத்தில் 2 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேரும் நிலச்சரிவு மற்றும் மழைக்குப் பலியாகியுள்ளனர். 
மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளபோதிலும், அணைக்கு வரும் நீரின் அளவு கடுமையாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து கூடுதல் ஷெட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 
இதுபோலவே முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டால் அந்த நீரும் இடுக்கி அணைக்கு வரும் என்பதால் அங்கு உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். 
கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி வேண்டிய உதவிகள் செய்வதாக கூறியுள்ளார். நிலைமையை கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 
கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அப்போன்ஸ் கண்ணன்தானம் கூறுகையில் ''கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழு நடவடிக்கை எடுத்து வருகிறது'' எனக்கூறினார்.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...