Showing posts with label கோவில்கள். Show all posts
Showing posts with label கோவில்கள். Show all posts

Sunday, 12 February 2023

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻




திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் திகழ்கிறது. 


குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள மலை மற்றும் குன்றுகளில் முருகப்பெருமான் கோவில்கள் நிறைந்து காணப்படுகின்றன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் திகழ்கிறது.


அலகுமலை கோவில் தல வரலாற்றை அறிய வரலாற்று சான்றுகளும் இலக்கிய சான்றுகளும் உள்ளன. திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டு ஒன்று கைலாசநாதர் கோவில் முன்பாக உள்ளது. அக்கல்வெட்டு கி.பி.1641–ம் ஆண்டு எழுதப்பட்டது.


பெயர் காரணம் :


அலகு என்றால் ‘மூக்கு’ என்பது பொருள். மூக்கின் வடிவம் போல் இந்த மலை அமைந்து உள்ளதால் ‘அலகு மலை’ என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அலகு மலைக்கு கீழே அழகாபுரி அம்மன் என்ற ஊர்க்காவல் தெய்வம் ஒன்று இருப்பதால் இந்த மலைக்கு அலகுமலை என்ற பெயர் வந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். மலை மீது முருகப்பெருமான் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


மலை அடிவாரத்தில் மயில் வாகன மண்டபம் உள்ளது. இதையடுத்து படியேறி எட்டு தூண்கள் கொண்ட மண்டபத்தை கடந்தால், இடதுபுறத்தில் பாதவிநாயகரை தரிசிக்கலாம். அலகுமலை படிகளின் ஆரம்பத்தில் பாத விநாயகர் கோவில் உள்ளது. விநாயகரை வழிபட்டு விட்டு, வடக்கு நோக்கி அமைந்துள்ள படிகளை கடந்தால் இடது புறம் இடும்பன் சன்னிதி அமைந்துள்ளது.


ஆறுபடை வீடுகள் :


இடும்பன் சன்னிதியைக் கடந்து மலையின் மேற்காக உள்ள 300 படிகளை கடந்து மேலே சென்றால் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்யலாம். இந்த ஆறுபடை வீடுகள் கோவில் 1984–ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் உள்ளாரோ, அதே போன்று இந்த சன்னிதிகளிலும் காட்சி தருவது சிறப்பம்சமாகும். அத்துடன் சண்முகருக்கு ஒரு சன்னிதி அமைந்துள்ளது. மலை பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும் மேலே ஏழாவது படைவீடாக அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும். ஆறுபடை வீடு சன்னிதிகளின் அருகில் நவக்கிரக சன்னிதி உள்ளது.


இடும்பன் சன்னிதி அருகில் குழந்தை குமார் கோவில் உள்ளது. இங்கு அலகுமலை குமரன், பாலகனாக காட்சி அளிக்கின்றார். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு, அதை நிறைவேற்றும் தெய்வமாக இந்த பாலமுருகன் திகழ்கிறார். பழனி மலையில் இருப்பது போல் ஆண்டி கோலத்தில், சிறிது குஞ்சம் போன்று முடியுடன் வலது கையில் தண்டாயுதத்தை தாங்கியபடி இறைவன் காட்சி தருகிறார்.


முருகனின் சமயோசிதம் :


அலகுமலை கோவில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. கிழக்கில் தாழ்ந்தும் மேற்கில் உயர்ந்தும் காணப்படுகிறது. கோவில் கருவறையில் முத்துகுமாரசாமி பாலதண்டாயுதபாணியாக, முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


ஒரு முறை திருகயிலாயத்தில் பாலகனான முருகப்பெருமான் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பார்வதிதேவியும், கங்காதேவியும் தன் அருகில் வருமாறு அழைத்தனர். ஆனால் முருகப்பெருமான், அவர்கள் அருகில் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான், முருகனின் அருகில் சென்று, ‘இங்கே உள்ள இரண்டு தாய்மார்களில் உனக்கு கங்காதேவியை பிடிக்குமா? பார்வதிதேவியை பிடிக்குமா?’ என்று கேள்வி எழுப்பினார்.


அதற்கு முருகப்பெருமான், ‘அறன் மாதாவின் மீதுதான் எனக்கு மிகுந்த ஆசை’ என்று கூறினார்.


இவ்விடத்தில் முருகப்பெருமான் கூறிய பதில் சமயோசிதமானது. அதாவது ‘அறன்மாதா’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ‘அறம் வளர்த்த நாயகி’ என்பது ஒரு பொருள். அறம் வளர்த்த நாயகி என்றால் பார்வதி தேவியை குறிக்கும். மேலும் ‘உயிர்களை காக்கும் நீர்’ என்ற பொருளும் உண்டு. இது கங்காதேவியை குறிப்பதாகும். இவ்வாறு முருகப்பெருமான் ஒரு வார்த்தையில் இரண்டு அன்னையரையும் பிடிக்கும் என்று கூறினார்.


இத்தகைய சிறப்புகளையுடைய பாலதண்டாயுதபாணியை காண கோவிலுக்குள் நுழையும் முதலிலே இருப்பது கொடிமரம். கொடிமரத்திற்கு மேற்கு நோக்கி மயில் வாகனமும் அதற்கு அருகில் பலிபீடமும் உள்ளது. தல விருட்சமாக வில்வ மரம் கோவிலின் இடது புறத்தில் அமைந்துள்ளது.


கோவில் மகா மண்டபத்தின் உள்ளே வலது புறத்தில் கடந்த 18 ஆண்டுகளாக சிறப்பு சங்கடஹர சதுர்த்தி விழாக்காணும் ஆனந்த விநாயகரும், வலம்புரி விநாயகரும் அருள்பாலிக் கிறார்கள். இடது புற மேடையில் வீரபாகு தேவரும், தெற்கு நோக்கிய தனி சன்னிதியில் தேவியர் வள்ளி, தெய்வானையும் அருள்பாலிக்கிறார்கள். கர்ப்பக்கிரகத்தில் முருகன் ஆண்டி கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை கோவில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.


கவலை தீர்க்கும் கந்தன் :

நடுவில் கர்ப்பக்கிரகம் உள்ளது. இதில் முருகவேள் ‘முத்துகுமார பால் தண்டாயுதபாணி’ எனும் பெயர் தாங்கி கண்களை சற்று தாழ்த்திய நிலையில் கையில் தண்டாயுதத்துடன் ஞான குருவாக காட்சி தருகிறார். ஞான குருவான அவரை நெஞ்சாரப்பணிவோரின் குறைகள், கவலைகள், பிரச்சினைகள் தீர்வது இன்றும் நடக்கும் நிகழ்வாகும். சுமார் 4 அரை அடி உயர திருவுருவில் காட்சி அளிக்கும் முருகப்பெருமானை, வெள்ளிக் கவசத்தில் காணும்போதும் கண்கள் இமைகளை மூட மறுக்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலை காண சுமார் 300 படிகளில் ஏறி செல்ல வேண்டும். வாகனங்கள் கோவில் வரை செல்ல சாலை வசதியும் உள்ளது.


நடை திறந்திருக்கும் நேரம்: 


காலை 6:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.


அமைவிடம் :


திருப்பூருக்கு தென்கிழக்கில் தாராபுரம் சாலையில் 22 கிலோமீட்டர் தூரத்தில் அலகுமலை கிராமம் அமைந்துள்ளது. 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கிராமத்தில், அழகு பெற்று எழில் சூழ்ந்த அலகுமலை காணப்படுகிறது. சூரியனுடன் சேர்த்து ஒன்பது கிரகங்கள், நவக்கிரகங்களாக உள்ளன. அது போன்று இந்த மலையை சுற்றிலும் ஏழு மலைகள் உள்ளன. அவை சென்னிமலை, சிவன் மலை, வட்டமலை, ஊதியூர் மலை, பழனிமலை, மருதமலை, கதித்தமலை ஆகியனவாகும். இந்த ஏழு மலைகளுக்கு நடுவில் அலகுமலை காட்சியளிக்கிறது. இதுவும் அலகுமலையின் தனிச் சிறப்பு ஆகும். 


#From ; TirupurTalks

சென்னிமலை முருகன் கோவில்

 *"39 ஆண்டுகளுக்கு முன் ..சென்னிமலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு*

*"இதே பிப்ரவரி 12 (1984) அன்று நம் சென்னிமலையில் நிகழ்ந்த அற்புதம்*"




லட்சக்கணக்கான மக்கள் கண்டு களிக்க, இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட வண்டி நம் சென்னிமலையின் 

1320படிக்கட்டுக்கள் வழியாக மலை, உச்சியை அடைந்த அதிசயம்! 

 

· 12.2.84 . கிழக்கே வெளுத்தது. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் மக்கள் மலை அடிவாரத்தில் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரையில் படிக்கட்டுக்களின் இரு பக்கங்களில், அதிகாலையிலிருந்தே நின்றும், அமர்ந்தும், மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டும் தங்களுக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள ஆயத்தமாயினர்.


· 12.2.84 அன்று காலை சரியாக 7:30 மணி. அலங்காரம் செய்யப்ட்ட இரட்டை மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட இரண்டு காளை மாடுகளும் கம்பீரமாக தயாராக இருக்க, அப்பொழுதுதான் வண்டியை யார் ஓட்டுவார் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டபடி பச்சை வேட்டி மஞ்சள் துண்டு அணிந்து, வண்டியை ஓட்ட, வண்டியில் அமர்ந்தவர் 60 வயதான பெருந்துறை சிவன்மலைக் கவுண்டர்.


· சிவன்மலைக் கவுண்டர் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், காளைமாடுகள் இரண்டும் கம்பீரமாகப் படிக்கட்டுக்களில் ஏற ஆரம்பித்து விட்டன.


· காளை மாடுகள் ஒவ்வொரு படியை மிதித்து மேலேறும்போது மலையே “அரகரா” என்று முழக்கமிட்டதைப் போல, அடிவாரம் முதல் மலை உச்சி வரை இருந்த பக்தர்களின் அரகர முழக்கங்கள் அதிர்ந்து எதிரொலித்தன.


· லட்சக் கணக்கான மக்கள் சுற்றிலும் இருந்து அரகரா முழக்கங்களை எழுப்பியபோதும் வண்டியில் பூட்டப்பட்ட மாடுகள் இரண்டும் மக்கள் கூட்டத்தைக்க் கண்டும், கோஷங்களைக் கேட்டும் சிறிதும் மிரளவில்லை. இராணுவ வீரர்களைப் போல் ஒருவிதமான மிடுக்கோடு மலைப்படிகளில் ஏறின ! சரியாக நாற்பத்தாறு நிமிடங்களில் ஆயிரத்து முன்னூற்று இருபது படிகளையும் கடந்து, மலையுச்சியிலுள்ள முருகன் சந்நிதியில் போய் நின்றன.


· மலையுச்சியை வண்டி மாடுகள் அடைந்ததும் லட்சக்கணக்கான மக்களின் அரகரா முழக்கமும் உச்சத்தைத்தொட,வண்டி மாடுகளுடன் சிவன்மலைக் கவுண்டருக்கும் வண்டி மாடுகளுக்கும் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.


· பிரகார வழிபாட்டுக்குபின் சிவன்மலைக்கவுண்டர் வண்டியின் மீது ஏறி நின்று, நிகழ்வுக்கு வண்டி, மாடுகள், சாட்டை மற்றும் உபகருவிகளை வழங்கிய அனைவருக்கும் ஏனையோருக்கும் நன்றி தெரிவித்தார்.   

 

· முன்னதாக சில வாரங்களுக்கு முன்னரே, சென்னிமலை வேலவரே கனவில் வந்து ஆணையிட்டதாகக் கூறி, வண்டி, காளைமாடுகள், சாட்டை மற்றும் வண்டி ஓட்டத் தேவையான உபகரணங்களை பல்வேறு ஊர்களைச் சேர்ந்த குறிப்பிட்ட பக்தர்கள் வேட்டுவபாளையம் வேளாளத்தம்பிரான் மடத்தைச் சேர்ந்த சின்னப் பூசாரியார் பொன்னுச்சாமி வசம் காணிக்கையாக அளித்தனர்.


· இரண்டு காளை மாடுகளை இந்த நிகழ்வுக்குக் காணிக்கையாக கொடுத்தவர் சென்னிமலையை அடுத்த முத்தூரைச் சேர்ந்த துரைசாமிக் கவுண்டர். காளை மாடுகளைப் பூட்டிச் செல்லும் இரட்டை மாட்டு வண்டியை காணிக்கையாகக் கொடுத்தவர் அந்தியூர் அருகே விராலிக்காட்டூர் கோபால் கவுண்டர்.


· கனவில் தோன்றிய இறை ஆணையைக் குறிப்பிட்டு, 12.2.84 அன்று காலை சென்னிமலை முருகன் கோவில் படிக்கட்டுக்களில் இரட்டைமாட்டு வண்டி செல்ல வேண்டும் என்பதற்காக, முன்னதாகவே பெரியார் மாவட்ட அன்றைய ஆட்சித்தலைவர் ராஜாராம் அவர்களிடம் அனுமதி கேட்கப்பட்டது. இம்மாதிரி மாதிரியான நிகழ்வுக்கு, முன்மாதிரி நிகழ்வுகள் நடைபெற்றிராத சூழ்நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வண்டியை இழுத்துக் கொண்டு மாடுகள் மலைப் படிக்கட்டுக்களில் ஏறிச்செல்லும்போது, கூட்டத்தைக் கண்டு, காளை மாடுகள் மிரண்டு போய், தாறுமாறாக ஓட ஆரம்பித்து விட்டால், அசம்பாவித நிகழ்வுகள் நடக்கக்கூடாது, மற்றும் மக்களின் பாதுகாப்புக்காரணங்களுக்காக முதலில் அவர் அனுமதி மறுத்திருக்கிறார். “முருகன் அருளால் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காது” என்று பலரும் எடுத்துக்கூறிய போதும் கலெக்டர் அவர்கள் சென்னிமலைக்கு நேரில் வந்து, மலை உச்சிவரை படிக்கட்டுக்களில் ஏறிச் சென்று பார்வையிட்டிருக்கிறார். பிறகு அரைமனதோடுதான் நிகழ்ச்சிக்கு அனுமதியளித்திருக்கிறார் என்று பலரும் அந்நாளில் கூறுவதுண்டு..   




· முந்தைய நாளான 11.2.1984 அன்று பிற்பகல் சின்ன வேட்டுவபாளையத்திலிருந்து சென்னிமலைக்கு விட்டுப் புறப்பட்ட வண்டிக்கு வழி நெடுக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு சென்னிமலை அருள்மிகு கைலாசநாதர் கோவிலிலும் 12.2.84 அதிகாலை மலை அடிவாரத்திலும் சிறப்புப் பூசைகள் நடைபெற்றன.


· 1320 படிகளிலும் கம்பீரமாக ஏறிச் சென்ற காளை மாடுகள் பூட்டிய வண்டியைப் பின்தொடர்ந்து சென்ற அதிமுக்கியப்பிரமுகர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ராஜாராமன், துணை ஆட்சியர் சந்திரபிரகாஷ், காவல்துறை கண்காணிப்பாளார் திரு அப்பாத்துரை ஆகியோர் அன்றைய மாலை வெளிவந்த கோவைப் பதிப்பான “மாலை முரசு” “சென்னிமலையில் இன்று நடந்த அதிசய நிகழ்ச்சி ..ஆறு லட்சம் பேர் பக்தர்கள் திரண்டு பார்த்தனர்” என்று முதல் பக்கக் கொட்டை எழுத்துத் தலைப்புச் செய்தியாக, சென்னிமலையில் மாட்டு வண்டி மலையேறிய செய்தியை வெளியிட்டது. இவ்வபூர்வ நிகழ்ச்சியை “ஹிந்து” ”இந்தியன் எக்ஸ்பிரஸ்” முதலிய ஆங்கிலத் தினசரிகளும், “தினமணி” ”தினத்தந்தி” “மாலைமுரசு” முதலிய தமிழ்தினசரிகளும், “இதயம் பேசுகிறது” ”தேவி” முதலிய தமிழ் வார இதழ்களும் சிறப்புச்செய்திகளாக வெளியிட்டன.

· பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா தேசிய செய்தி நிறுவனமும் இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி வெளியிட்டதனால், தேசிய அளவிலும் சென்னிமலையில் “இரட்டைமாட்டு வண்டி மலைப்படிக்கட்டுகளில் ஏறிச் சென்ற நிகழ்ச்சி முக்கியத்துவம் பெற்றது !   

· 12.2.84 அன்று காலையிலேயே இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட வண்டி மலையேறப் போகிறது என்பதால் 11.2.84 அன்று இரவிலிருந்தே பல ஊர்களில் இருந்து மக்கள் கூட்டம் சென்னிமலையை நோக்கி பயணித்தது. ஈரோடு காங்கயம் பெருந்துறையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயங்கின. மக்களை சென்னிமலைக்கு கொண்டுவந்து சேர்த்தன !

· சென்னிமலைக்கு வரும் எல்லா வழித்தடங்களிலும் பேருந்துகள் வாகனங்கள் சென்னிமலைக்குச் சில கிலோ மீட்டர் தூரத்திலேயே நிறுத்தப்பட்டன. மக்கள் பாதசாரியாக எல்லாத் திசைகளில் இருந்தும் மலை அடிவாரத்துக்கும் மலைக்கும் குவிந்தனர். பல லட்சம் பேர் கலந்து கொண்ட அந்த நிகழ்சசிக்கு ஈரோடு மாவட்டம் காவல்துறை மற்றும் சென்னிமலை காவல்துறை அதிகாரிகளும் காவலர்களும் மிகச் சிறப்பான, பாராட்டுக்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

· பரப்பளவில் சிற்றூராக உள்ள நம் சென்னிமலையில், “மலையா -மக்கள் தலையா” என்று அதிசயக்கும் வண்ணம் ஒரே சமயத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து பல லட்சம் மக்கள் திரளாகக் கலந்து கொண்டபோதும், எந்தவித அசம்பாவித நிகழ்வுகளும் இல்லாமல், 1320 மலைப் படிக்கட்டுக்கள் இரட்டை மாட்டு வண்டி ஏறிச் சென்ற அதிஅற்புத - அதிசய நிகழ்ச்சியை. நம் சென்னிமலைக்கு கூடுதல் பெருமை சேர்த்த நிகழ்ச்சியை, 36 ஆண்டுகள் கழித்து, நிகழ்வு நடைபெற்ற அதே தேதியான இன்று 12.2.2023இல் “மலரும் நினைவுகளாக ” மீண்டும் நினைவு கூர்வதில் / பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி.


From ; FB சென்னிமலை ஆண்டவர்

Thursday, 29 September 2022

வாழைத் தோட்டத்து அய்யன்

 வாழைத் தோட்டத்து அய்யன்



கருமத்தம்பட்டி வாழைத் தோட்டத்து அய்யன் கோவை மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறார். இப்பகுதியில் குடியானவராக அவதரித்த அய்யனின் இயற்பெயர் சின்னையன், அவரது தோட்டம் வாழைத் தோட்டம். இவர் செங்காளியப்ப கவுண்டரின் மகனாக 1777ல் அவதரித்தார். 12 வயது வரை கல்வி பயின்றார். பின் இவரது தந்தை விருப்பப்படி மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார்.

மாடு மேய்க்கும் போது கற்களை சேர்த்து தெய்வ உருவமாக்கி வழிபடுவார். ஒருநாள் ஒரு பெரியவர் இவரது வேண்டுகோளை ஏற்று சர்வவிஷ சம்ஹார மந்திரத்தையும், பஞ்சாட்சர மந்திரத்தையும் உபதேசித்து அருளினார். அத்துடன் சின்னையனின் வீட்டில் ஒரு அறையில் இதே பெரியவர் சிவபெருமான்-உமாதேவியருடன் வீற்றிருக்கும் கோலத்தை காட்டி மறைந்து விட்டார். பின்னர் சின்னையன் தன்னை நாடி வந்தவர்களின் தீராப்பிணியையும், பாம்பு மற்றும் தேள் போன்ற கொடிய நச்சுப்பிராணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபூதியாலும், பஞ்சாட்சர மந்திரத்தாலும் குணப்படுத்தி வந்தார். ஆனால் எவரிடமுமம் கூலி எதிர்பார்க்கவில்லை.

ஒரு முறை அப்பகுதி அதிகாரி மனைவியின் வெண்குஷ்ட நோயை திருநீற்றால் குணப்படுத்தியதற்கு ஆயிரம் வெண் பொற்காசுகளை தாசில்தார் கொடுத்தார். ஆனால், சின்னையன் ஏற்காமல் அந்த பணத்தை ஆண்டவனுக்கே செலவழிக்க கூறிவிட்டார்.அவர் ஒவ்வொரு ஆண்டும் திருப்பேரூர் சென்று நடராஜரை தரிசிப்பது வழக்கம். தன் 72வது வயதில் திருவாதிரைக்கு முதல் நாள் அவரது மக்கள் அவரை திருப்பேரூருக்கு அழைத்தனர். ஆனால் அவர் "நான் நாளை கயிலாச நாதரை தரிசிக்கச் செல்கிறேன்'', என்று கூறிவிட்டார்.

மறுநாள் தான் அன்புடன் வளர்த்த காளைமாட்டை தேடிக் கொண்டு தோட்டத்திற்கு வந்தார். அந்த மாடு அவரது படுக்கையில் தான் படுக்கும். இருந்தும் திடீரென அந்த மாடு பாய்ந்து அவரை கொம்புகளால் குத்தி தூக்கி எறிந்தது. சின்னையன் இறைவன் திருவடி சேர்ந்தார். இந்த சம்பவம் நடந்து 155 ஆண்டுகள் ஆகிறது.அவர் மறைந்த பின், அவர் தனது பண்ணையாளின் கனவில் தோன்றி தாம் பூஜித்த லிங்கம், நந்தி இவைகள் மறைந்திருக்கும் இடத்தை சொன்னார். இவர் கூறியதைப்போல் லிங்கம், நந்தியை எடுத்து வந்து அவர் முக்தி அடைந்த கிளுவை மரத்தின் கீழ் வழிபாடு செய்து வந்தனர். அந்த லிங்கத்தின் அருகே ஒரு பாம்பு புற்றும் வளர்ந்தது. அந்த புற்று மண்ணே ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நஞ்சை தீர்க்கும் அரு மருந்தாக பயன்பட்டு வருகிறது.

இங்கு கிடைக்கும் புற்று மண்ணில் மிகச் சிறிதளவை உங்கள் வயல் அல்லது தோட்டத்து மண்ணில் கலந்து விட்டால், பாம்புத் தொல்லை, விஷ ஜந்துக்களின் தொல்லை இருக்காது. பாம்பு கடித்தவர்களுக்கு புற்று மண் பூசப் பட்டு விஷம் நீங்கப்பெறுவதாக நம்பிக்கை. வீடுகளில் பூச்சித்தொல்லை இருந்தால் புற்று மண்ணை நீரில் கலந்து வீட்டை சுற்றலும் தெளித்தால் விஷப்பூச்சிகள் அண்டாது என்பது நம்பிக்கை. புற்று மண் எவ்வளவு எடுத்தாலும் குறையாது என்பது இறைவனின் திருச்செயலாகும். நீங்கள் விவசாயியாக இருந்தால், அடிக்கடி வயலிலும், தோட்டத்திலும் பாம்புகளை பார்க்கக் கூடும். பாம்பு பற்றிய பயத்தை தவிர்க்கவும், அவற்றால் தீங்கு ஏற்படாமல் இருக்கவும் இத்தலம் வந்து தங்கி வாழைத் தோட்டத்து அய்யனை வழிபட்டுச் செல்லலாம்.

திருவிழா: மார்கழி திருவாதிரை
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி: அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில் கருத்தம்பட்டி - கோயம்புத்தூர் மாவட்டம்.

தாராபுரம் காடு ஹனுமந்தராய சுவாமி

 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைந்துள்ள காடு ஹனுமந்தராய சுவாமி கோவிலின் அரிய தகவல்கள் 

அனுமன் தரிசனம் - ஆங்கிலேய கலெக்டரின் நோய் தீர்த்த அனுமன்!

           இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, அப்போதைய கோவையின் கலெக்டராக இருந்த டீலன், ராஜபிளவை என்னும் கொடிய நோய்க்கு ஆளானார். வலியும் வேதனையும் தாங்கமுடியாமல் தவித்தவர், மற்றவர்கள் சொல்லியதன்பேரில் ஓர் அனுமன் கோயிலுக்குத் தொடர்ந்து சென்று வழிபட்டுவர, ராஜபிளவை நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமடைந்தார். தனக்கு அருளிய ஆஞ்சநேயருக்குக் காணிக்கையாகக் கோயில் கர்ப்பகிரகத்தைக் கட்டிக்கொடுக்க முன்வந்தார். கோயில் கோபுரம் கட்ட முயற்சி செய்தபோது, பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், `கோபுரம் கட்ட வேண்டாம்' என்று கூறிவிட்டார். அதன் காரணமாகவே இன்றைக்கும் அந்தக் கோயில் கோபுரம் இல்லாமல்தான் இருக்கிறது.

கலெக்டரின் நோய் தீர்த்த ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீகாடு ஹனுமந்தராய சுவாமி ஆலயம் என்ற பெயரில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

ஆஞ்சநேயரிடம் ஆழ்ந்த பக்திகொண்டிருந்த ஸ்ரீவியாசராயர், தேசத்தின் பல்வேறு பகுதிகளில் 732 ஆஞ்சநேய மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்துள்ளார். அவற்றுள் 89-வது மூர்த்திதான் ஸ்ரீகாடு ஸ்ரீஹனுமந்தராய சுவாமி.

கருவறையில் ஸ்ரீஹனுமந்தராய சுவாமியின் திருவடிகள் வடக்கு நோக்கி இருக்க, தன் திருமுகத்தைச் சற்றே கிழக்கு நோக்கித் திருப்பியவண்ணம் காட்சி தருகிறார் ஸ்ரீஹனுமந்தராய சுவாமி. இடுப்பில் சலங்கை மணிகளும் கழுத்தில் சுதர்சன சாளகிராம மாலைகளும் அலங்கரிக்க, வலக்கையில் அபய ஹஸ்தம் காட்டி, இடக்கையில் சௌகந்திகா மலரை ஏந்தியபடி அருள்கிறார்.

திருமண வரம், குழந்தை வரம் வேண்டுவோரும், தீராத நோய்கள் தீரவும் எண்ணற்ற பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து ஹனுமந்தராய சுவாமியை தரிசித்து வருகின்றனர். ஆஞ்சநேயர் கோயில்களுக்கே உரிய வடை மாலை, வெற்றிலை மாலை பிரார்த்தனைகள் இந்தக் கோயிலில் வழக்கத்தில் இல்லை. ஆண்டுதோறும் அனுமன் ஜயந்தி விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று ஹனுமந்தராய சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறுகின்றன. இங்குள்ள கொடி மரத்தில் துணியைக் கட்டி வேண்டிக் கொண்டால், வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.


Courtesy TirupurTalks

Friday, 13 July 2018

அபூர்வ தகவல்கள்

திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழு மலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரி பாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.

திருமலையில் உள்ள பெருமாளுக்கு மார்கழி மாதம் சிவனுக்குரிய திருவாதிரை நட்சத்திர தினத்தன்று வில்வத் தளங்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் போகிற வழியில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அல்லாவுக்கு பூஜை நடக்கிறது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

ஆந்திராவில் உள்ள பத்ராசலத்தில் ராமர் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் அபிஷேகிக்கப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண, சிங்கப்பெருமாள் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.

திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு, சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைத்த சிவன்-திருமால் கோயில் இதுமட்டும்தான்.


Saturday, 30 June 2018

விநாயகர் உருவம் பற்றிய சில தகவல்கள்

விநாயகர் உருவம் சில ஆன்மிக தகவல்களை உணர்த்தும் வகையில் உள்ளது.

விநாயகப் பெருமான் அரவத்தை தனது இடுப்புக் கச்சையாக அணிந்திருப்பதன் தத்துவம் மாயையினைத் தமது விருப்பம்போல இயக்கும் வல்லமை பெற்றவர் என்பதாகும். 
விநாயகரின் பெருச்சாளித் தத்துவத்தின் விளக்கம் பெருச்சாளி இருளை விரும்பும், கீழறுத்துச் சென்று கேடு விளைவிக்கும். அதனால் அது அறியாமை அல்லது ஆணவ மலத்தைக் குறிக்கும். எனவே அப்பெருச்சளியைப் பிள்ளையார் தமது காலின்கீழ் கொண்டிருப்பது அவர் அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதை உணர்த்துகின்றது.
காகவடிவாக வந்து கமண்டல தண்ணீரை தட்டியூத்திய தத்துவம் உணரத்துவது அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள காவிரி நதியினை காகவடிவத்தில் வந்த விநாயகப் பெருமான் கவிழ்த்துவிட இந்த நதி பெருகி பலசோலைகளைக் கடந்து இறுதியில் கடலுடன் கலந்தது. கமண்டலம் மனித உடல், அதற்குள் இருந்த காவிரிநீர் ஆன்மசக்தி. 
ஆன்மா அறியாண்மை காரணமாக இவ்வுடலே நிலையானது என்று நினைத்திருக்கின்ற காலத்தில் குரு வந்து நினைப்பது பிழை நீ போகவேண்டிய தூரம் வெகுதொலைவு என்பதைப்போல காக வடிவத்தில் வந்த விநாயகர் கமண்டலத்தை கவிழ்த்துவிட வெறும் உடம்புக்குள் இருந்த ஆன்மா இறுதியில் இறைவனைப்போய் சேருவது போல காவிரி நீரானது இறைவனைப்போய் சேருகின்றது என்ற பரந்த ஆழமான தத்துவத்தை விளக்குகின்றது.விநாயகரின் பெருவயிறானது, பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்குள் அடக்கம் என்பதையும் இருபெருங்காதுகள் பலகோடி உயிர்களின் முறையீடுகளைக் களைவதற்காகப் பெரும் இரு காதுகளை கொண்டுள்ளார் என்பதையும் பஞ்சபூத தத்துவத்தின் விளக்கம் பஞ்சபூதங்களை தம்முள் அடக்கி ஆள்பவர் என்பதைக் காட்டுவதற்காகவும் அவர் மடித்து வைத்துள்ள ஒருபாதம் பூமியையும், சரிந்த தொந்தி நீரையும், அவருடைய மார்பு நெருப்பையும், இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம் காற்றையும், அதன் நடுவில் வளைந்திருக்கும் கோடு ஆகாயத்தையும் உணர்த்தி நிற்கின்றன அவர் வைத்திருக்கும் ஆயுதங்கள் ஐந்தொழிலை உணர்த்துகின்றன. அவரது பாசம் படைத்தலையும், அங்குசம் அழித்தலையும், ஒடிந்த தந்தம் காத்தலையும், துதிக்கை மறைத்தலையும், மோதகம் அருளலையும் உணர்த்தி நிற்கின்றன.

Thursday, 14 June 2018

தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில்

பராந்தசுபுரம் என்றும் இராஜபுரம் என்றும் விராடபுரம் என்றும் பெயர்கொண்டு விளங்கும் தாராபுரம் நகர் சரித்திர புகழ் பெற்ற ஸ்தலமாகும். இந்நகரில் அமராவதி நதிக்கரையில் (ஆண் பொருணை நதி) கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆவார். முன்பு ஒரு காலத்தில் பார்வதி தேவியார் திருமண நாளில் பிரம்மா, திருமால் முப்பத்தி முக்கோடி தேவர்கள்

முதல் யாவரும் மேரு மலையில் ஒன்று சேர்ந்தார்கள். சுமை ஏறிய மேரு மலையின்; வடதிசை இறங்கியது. இதனால் தென்புலி மேல் எழுந்தது. பூமியை சமநிலை ஆக்க சிவபெருமான் அகஸ்தியரை தென் மலையான பொதிகைக்கு செல்லுமாறு கட்டளையிட்டார். அகஸ்தியரும் பொதிகை மலை செல்லும் வழியில் உள்ள கொங்கு நாடான தாராபுரத்தில் அமராவதி நதிக்கரையில தங்கினார்.
தினசரி ஒவ்வொரு நாளும் ஆர்மாத்த பூஜையை தங்கும் ஊர்களில் நடத்தி வந்தார். அச்சமயத்தில் அமராவதி ஆற்றங்கரையில் தன்னுடைய பூஜைக்கு உரிய சிவலிங்கத்தை காசியில் இருந்து சீடர்கள் கொண்டு வருவதற்கு தாமதம் ஏற்பட்டு விட்டதால் சிவ பூஜையை முடிக்க தன்னுடைய திருக்கரங்களால் அமராவதி புனித நீரின் மணலை பிடித்து வைத்து பூஜித்தார். ஆகவே அதற்கு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் என பெயர் வர காரணமாயிற்று. மேலும் தனது சீடர்கள் காசியில் இருந்து லிங்கத்தை தாமதமாக எடுத்து வந்ததால் இவர் பிடித்து வைத்த லிங்கமே மூலஸ்தானம் ஆகியது. சீடர்கள் கொண்டு வந்த லிங்கம் வலது பக்கம் காசி விஸ்வநாதர் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேலும் மகாபாரத புராண கதையில் அஞ்ஞான வாசம் பாண்டவர்கள் இவ்வ+ரில் தங்கி வழிபட்டனர். இத்திருக்கோயிலானது மூர்த்தி தீர்த்தம் ஸ்தலம் ஒருங்கே அமைந்தது.
இக்கோவிலை புத்தூர் திருமலைசாமி பகவான் போன்றோர் வழிபட்டுள்ளனர். இக்கோவிலின் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மனம் உருகி பிரார்த்தனை செய்தால் திருமண தடை, வேலைவாய்ப்பு, புத்திர தோஷம் மற்றும் சித்த பிரமை தோஷம் நிவர்த்தி ஆகும். சுகல ஷேமங்களும் பெறுவார்கள். புண்ணிய நதியாகிய அமராவதியல் நீராடி தரிசனம் செய்தால் சகல நன்மைகளும் அடைவர்.
நன்றி நவநீதன்

Monday, 4 June 2018

கிரகதோஷம் நீக்கும் கலியுகக் கடவுள், தாராபுரம் காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில்

தாராபுரம் நகரில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த கோயில்களில் சக்தி வாய்ந்தது, காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் - கிரகதோஷம் நீக்கும் கலியுகக் கடவுள் !!



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த கோயில்களில் சக்தி வாய்ந்தது, காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில். கிஷ்கிந்தை ராஜ்யத்தில், சுக்ரீவனுக்கு மதியூகம் கொண்ட அமைச்சனாக, சொல்லின் செல்வனாக, உற்ற நண்பனாக விளங்கிய அனுமன், ராமரை தரிசனம் பெற்ற பின்னர் ஆஞ்சநேயராகப் பெயர்கொண்டு, சிரஞ்சீவியாகி, இன்றும், அனைவராலும் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார்.
வாயு புத்திரனாகிய ஸ்ரீஹனுமன் ஒருவரே வல்லமை படைத்தவர். விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் இணைக்கும் பிரமாண்ட வடிவம் எடுத்துத் தன் ஆற்றலை நிரூபித்தவர். கொடிய அசுரர்களையும், தீவினை புரிவோரையும் எளிதாக அழிக்கக்கூடிய பலம் பொருந்தியவர் என்றாலும், முனிவர்கள், ரிஷிகள் அனைவரும் போற்றும் வகையில் பணிவையும், எளிமையையும் கைக்கொண்டவர்.
கொங்குவள நாட்டில் விராட மன்னர் ஆட்சி புரிந்த தலம் தாராபுரம். புராண வரலாற்றில் இடம் பெற்ற ஊர். பஞ்சபாண்டவர் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் முடித்தபின் ஒரு வருடம் அஞ்ஞானவாசம் மேற்கொண்டபோது யாருக்கும் தெரியாமல் மாறுவேடம் பூண்டு வாழ்வதற்காக அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்தான் விராட நகர் என்ற இன்றைய தாராபுரம்.
தாராபுரம் நகரானது வளமையான வயல்களால் சூழப்பட்டதாகும். வான் உயர்ந்து வளர்ந்த கனி மரங்களையும் தன்னகத்தே கொண்டது. சோலைகளும், நந்தவனங்களும் சூழ்ந்திருக்க வற்றாத ஜீவநதியான அமராவதி ஆறு இங்கே பெருக்கெடுத்து ஓடுகிறது. தாங்கள் புனைவேடம் பூண்டிருந்த காலத்தில் தங்களது உடைமைகளையும், ஆயுதங்களையும் தில்லாபுரியம்மன் ஆலயத்தில் ஒளித்து வைத்திருந்தார்கள்பஞ்ச பாண்டவர்கள்.
இத்தகைய புராண பிரசித்தி பெற்ற இடத்தில்தான் மாத்வ சம்பிரதாயத்தில் வந்த ஸ்ரீவியாசராஜர் எனும் மகான் இத்தலத்தில் அனுமனை பிரதிஷ்டை செய்ய விரும்பி அவ்வாறே செய்தார். பாரத தேசம் முழுவதும் 732 இடங்களில் அனுமனை பிரதிஷ்டை செய்த அவர் தாராபுரத்தையும் அவற்றில் ஒன்றாகத் தேர்வு செய்திருக்கிறார் என்றால், இத்தலத்தின் பெருமையை எளிதாக உணரலாம். அந்தவகையில் 89வது மூர்த்தமாக விளங்குகிறார் இந்த அனுமந்தசுவாமி.
இது அடர்ந்த காட்டுப் பகுதியாக விளங்கியதால் ‘காடு’ என்ற அடைமொழியுடன், இந்த ஆஞ்சநேயர் ‘காடு ஹனுமந்தராயன்’ என்று போற்றப்பட்டார். 1810ல் கோவை கலெக்டராக விளங்கிய டீலன் துரை தாராபுரத்தில் முகாம் அமைத்திருந்தபோது அவருக்கு ராஜபிளவை என்ற கடுமையான நோய் ஏற்பட்டது. அப்பொழுது அவரைச் சுற்றியிருந்தவர்கள் இந்த ஆஞ்சநேயமூர்த்தியின் பராக்கிரமத்தை விளக்கிச் சொல்ல, அவர்களுடைய யோசனைப்படி அனுமந்தசுவாமியை அவர் தரிசனம் செய்ய, உடனே அந்த நோய் அவரை விட்டு விலகியது. இந்த நன்றிக்கடனாக, அவர் சுவாமிக்குத் தன் சொந்தப் பொறுப்பில் கர்ப்பகிரகத்தை கட்டிக் கொடுத்தாராம். 
திருப்பதி வெங்கடாசலபதியை போன்று 7 அடி உயரம் 2 அடி அகலம் கொண்டு பிரமாண்டமாக விளங்குகிறார் அனுமந்தசுவாமி. இவரது இரண்டு பாதங்கள் வடக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இடுப்பில் மணி சலங்கைகள் கட்டப்பட்டுள்ளன. இடுப்புப் பட்டையில் கத்தி செருகப்பட்டிருக்கிறது. வலது கை அபயம் காட்டி அருள்கிறது. இடது கையில் சௌகந்தி மலர் ஏந்தியிருக்கிறார். கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலைகள் அணிசெய்கின்றன. திருமுகம் வடகிழக்கு திசை நோக்க, அருள்பாலிக்கிறார். கிரீடத்தின் பின்புறத்தில் பட்டா கத்தி ஒன்றும் உள்ளது. தலைக்கு அருகே வலதுபுறம் சக்கரமும் இடதுபுறம் சங்கும் உள்ளன.
ஆஞ்சநேயருக்கு அடுத்து இடது புற மண்டபத்தில் ராமர் சந்நதி உள்ளது. சீதாதேவி, ஆஞ்சநேயர் சகிதமாக ராமர் திருக்காட்சி நல்குகிறார். ராமருக்கு அர்ச்சனைகள் செய்தபின் அனுமனுக்குச் செய்யப்படுகிறது. இது ஆரம்ப காலம் தொட்டு நடைபெறும் இந்தக் கோயிலின் சம்பிரதாயமாகும். துங்கபத்ரா நதிக்கரையில் மந்த்ராலயம் என்கிற தலத்தின் மூல பிருந்தாவனத்திலிருந்து மிருத்திகையை (புனித மண்) கொண்டு வந்து இந்த ராமர் சந்நதியை அமைத்திருக்கிறார்கள். அரச மரம் சுமார் 250 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்றது. நரசிம்ம தீர்த்த குளமும் மிகப் பெரியதாக அமைந்துள்ளது.
நவகிரக தோஷங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆஞ்சநேயரும், கணபதியும்தான் என்று சாஸ்திரங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. நெய்தீபம், வெண்ணெய், வடை மாலை ஆகியவற்றைப் படைத்து 9 வாரங்கள் வழிபட்டு வந்தால் நவகிரக தோஷம் நம்மைவிட்டு நீங்கிவிடும் என்பது ஆயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. ஆஞ்சநேயரின் திருவடிகளை உளமாற துதித்து வணங்கிவந்தால், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கியே செல்லும். தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. ஆலயத் தொடர்புக்கு தொலைபேசி எண். 04258 220749.
- லிங்கம் சின்னசாமி

From Dharapuram FB

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...