கலையிழந்து வருகிறது மெட்ராத்தி ஜமீன்
ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான சேவர்களுடன் இயங்கி வந்த உடுமலை மெட்ராத்தி ஜமீன் இன்று பராமரிப்பதற்கு ஆள் இல்லாத நிலையில் கலையிழந்து வருகிறது.
1800 ம் ஆண்டுகளுக்குப் பிறகு 72 பாளையபட்டுகள் தமிழகத்தில் ஆட்சி செலுத்தி வந்தன. குறு நில மன்னர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் பாசன திட்டங்கள், பாதுகாப்பு, இரவு காவல் என மக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்து வந்தனர். இதற்காக வரி வசூலித்து அந்தந்த பகுதிகளில் ஆட்சி நடத்தி வந்தனர் இந்த பாளையக்காரர்கள். இவர்களில் பலர் ஆங்கிலேய அரசுக்கு கட்டுப்படாமல் இருந்து வந்தனர். ஆனால் ஒரு சில பாளையக்காரர்கள் கீழ்பணிந்து நடந்து கொண்டனர். இதில் தங்களுக்கு கட்டுப்பட்டு வரி செலுத்த ஒப்புக் கொண்ட பாளையக்காரர்களை மட்டும் அந்த பகுதி ஜமீனாக நியமித்தது ஆங்கிலேய அரசு. அந்த வகையில் உடுமலை வட்டத்தில் மெட்ராத்திரி பாளையபட்டு என்ற பகுதியை 1876 ம் ஆண்டு ராமசாமி நத்தம நாய்க்கர் என்பவரிடம் ஆங்கிலேயர்கள் ஒப்படைத்தனர். ராமேகவுண்டன்புதூர், மெட்ராத்தி, இச்சிப்பட்டி, பணத்தம்பட்டி, ராமலிங்காபுரம், உலகப்ப கவுண்டன்புதூர், தாசர்பட்டி, உரம்பூர் ஆகிய 8 கிராமங்கள் மெட்ராத்தி ஜமீனுக்கு கீழ் ஆட்சிக்கு வந்தன. இதன் ஆட்சி பீடம் ராமேயகவுண்டன்புதூர் கிராமத்தில் அமைந்தன. இந்த ஆட்சி பீடத்திற்காக அந்த கிராமத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான ஒரு அரண்மனை எழுப்பப்பட்டது. இதில் ஒரு திருமண மண்டபம், அடுக்களைப் பகுதி, தர்பார் மண்டபம், அந்தப்புரம், குதிரை லாயம், சிம்மாசனம் ஆகியவைகள் கட்டப்பட்டன. இந்த அரண்மனையில் வாழ்ந்த ராமசாமி நத்தம நாயக்கர் ஆட்சி செலுத்தி வந்தார். இவர் மறைவுக்குப் பிறகு நடராஜ நத்தம நாயக்கர் பதவியேற்றுக் கொண்டார்.. ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற நேரத்தில் இவர் மெட்ராத்திரி ஜமீனாக பொருப்பில் இருந்து வந்தார். அதன் பிறகு வரி வசூல் முறையில் ஜமீன்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டது. ஆனாலும் மெட்ராத்திரி ஜமீன் கட்டுப்பாட்டில் உள்ள 8 கிராமங்களிலும் நடராஜ நத்தம நாயக்கருக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கப்பட்டு வந்தது. 8 கிராமங்களில் எந்த திருமணமாக இருந்தாலும் அரண்மனைக்கு வந்து ஜமீனிடம் மணமக்கள் ஆசி பெற்றுச்செல்லும் நடைமுறை இருந்து வந்தது. ஜமீன் குடும்பத்தை பொருத்த மட்டில் இவர்களது கட்டுப்பாட்டில் இருந்து வந்த சுமார் 500 ஏக்கர்களில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் 2007 ல் நடராஜ நத்தம நாய்க்கர் மறைந்த நிலையில் தற்போது அரண்மனை யில் வசித்து வரும் திருமலைசாமி நத்தம நாயக்கருக்கு பட்டம் சூட்டப்பட்டது. இந்த காலத்திலும் அரச பரம்பரை போல் 8 கிராம மக்கள் கூடி அவர்கள் முன்னிலையில் இவருக்கு முடிசூட்டப்பட்டது. தங்க மிஞ்சி அணிவித்து, பட்டத்து கத்தியுடன் இவருக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. இன்று வரை இவர் இந்த பாளையபட்டின் ஜமீனாக இருந்தாலும் இன்றைய நவீன உலகில் ஜமீன் நிர்வாகத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் தற்போதும் இன்று வரை 8 கிராமங்களில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் நடை பெறும் விழாக்களாக இருந்தாலும், வேறு எந்த பொது விழாக்கள், குடும்ப விழாக்களாக இருந்தாலும் முதல் மரியாதை இவருக்குத் தான். மெட்ராத்தி கூட்டுறவு சங்கத்தில் மூன்று முறை தலைவர் பதவியில் இருந்துள்ள திருமலைசாமி நத்தம நாய்க்கர் தூய்மையான நிர்வாகத்தை நடத்தி வந்துள்ளார் என்பது மக்களின் ஏகோபித்த கருத்து விஜயகுமார் என்ற பெயரில் பொது மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் இந்த ஜமீன் திருமலைசாமி நத்தம நாயக்கர் 8 கிராமங்களில் பள்ளிகள் கட்ட இடங்களை தானமாக கொடுத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குளங்கள் அமைக்கவும், கூட்டுறவு சொசைட்டிக்காக அலுவலகம் கட்டவும் அதற்கான இடங்களை தானமாக கொடுத்துள்ளார். ஜமீன் பரம்பரையில் வந்த இவர்கள் வெளியே எந்த குடும்பங்களிலும் தங்களது வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைப்பதில்லை. திருமண விசயங்களில் மதுரை மாவட்டம் மற்றும் தேனீ மாவட்டங்களில் அங்குள்ள பாளையக்காரர்கள் குடும்பங்களில் இருந்தே பெண் கொடுப்பது, பெண் எடுப்பது போன்ற உறவு முறைகளை இன்றளவும் வைத்துக் கொள்கின்றனர். அதே போல் திருமண விழாக்களை எந்த ஒரு திருமண மண்டபத்தில் நடத்துவது இல்லை. அரண்மனைக்குள்ளேயே அதற்கென்று ஒரு பந்தல் அமைத்துக் கொண்டு திருமணங்களை நடத்திக் கொள்கின்றனர். குறிப்பாக திருமணங்களுக்கு புரோகிதர் வைத்துக் கொள்வதில்லை. இவர்களது குடும்பத்தில் மூத்தவர்கள் ஒருவரை வைத்து திருமணத்தை நடத்தி விடுகிறார்கள். முக்கியமாக இவர்களது உறவினர்களோ அல்லது வெளியாட்களோ யாராவது உயிரிழந்து விட்டால் துக்கம் விசாரிக்க செல்லும்போது சடலத்தை பார்க்க மறுத்து விடுகிறார்கள். ஜமீன் பரம்பரையில் உள்ளவர்கள் சடலத்தை பார்க்கக் கூடாது என்கிறார் திருமலைசாமி நத்தம நாய்க்கர்.
7 ஏக்கரில் அமைந்துள்ள அரண்மனையை பராமரிக்க முடிவதில்லை. அந்த காலத்தில் சேவகம் செய்வதற்கு ஏராளமானவ ர்கள் இருந்தனர். இந்த காலத்தில் அத்தனை பேரை வேலைக்கு அமர்த்திக் கொள்வதும், அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதும் முடியாத காரியமாக உள்ளது. ஆகையால் இந்த அரண்மனையை சரியாக பராமரிக்க முடிவதில்லை என்கிறார் திருமலைசாமி நத்தமநாயக்கர்.
திருப்பூர் மாவட்டம் புதிதாக உருவாகிய பின்னர் உடுமலை வட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிதாக மடத்துக்குளம் வட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதில் மெட்ராத்தி ஜமீன் மடத்துக்குளம் வட்டத்தில் சேர்ந்து கொண்டது.தற்போது மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள மெட்ராத்தி ஜமீனுக்குச் சேர்ந்த 8 கிராமங்களிலும் தற்போது வருவாய்த் துறையினர் வரி வசூல் செய்து வருகின்றன்றனர். அந்த காலத்தில் ஆங்கிலேயர்களால் ஒவ்வொரு கிராமத்திற்கு கொடுத்த வருவாய் கிராம எண்ணை அடிப்படையாக வைத்தே இன்றைக்கும் வரி வசூல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: மெட்ராத்தி அரண்மனை சின்னக்கவுண்டர் சினிமா திரைப்படம் மூலம் தமிழகத்தில் புகழ் பெற்றது. பெரிய அளவில் ஹிட்டான இந்த திரைப்படம் மூலம் சினிமா உலகில் இந்த அரண்மனையை பேச வைத்தது. இதை தொடர்ந்து ஏராளமான இயக்குனர்கள் இந்த அரண்மனையை தேடி வரத் தொடங்கினர். விஜயகாந்த் நடித்த என் ஆசை மச்சான், சத்யராஜ் நடித்த தாய்மாமன், சரத்குமார் நடித்த மூவேந்தர், அர்ஜுன் நடித்த ஏழுமலை, நெப்போலியன் நடித்த அழகர்மலை, சரத்பாபு நடத்த ஒரு பொன்னு ஒரு பையன் போன்ற தமிழ் படங்களும், இதுபோக கேரள சூப்பர் ஸ்டார்கள் திலீப் நடித்த பாண்டி படா, சுரேஷ் கோபி நடித்த ஜமீன்தார், மோகன்லால் நடித்த அலிபாய் போன்ற மலையாள படங்கள் எடுக்கப்பட்டன.
நன்றி :