Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, 24 August 2018

முதல் பார்வை: லக்‌ஷ்மி

தன் கனவுடன் குருவின் கனவுக்காகவும் சேர்த்து டான்ஸ் ஆடும் சிறுமியின் கதையே 'லக்‌ஷ்மி'.
வங்கியில் வேலை செய்யும் நந்தினியின் (ஐஸ்வர்யா ராஜேஷ்) மகள் லக்‌ஷ்மி (தித்யா). அம்மாவுக்கு இசை, நடனம் என்றால் அறவே பிடிக்காது. மகள் லக்‌ஷ்மிக்கு பேச்சு, மூச்சு, அசைவு, ஆர்வம், முயற்சி, பயிற்சி எல்லாமே நடனம்தான். இந்திய அளவில் மிகப் பெரிய நடனப்போட்டி ஒன்று நடைபெற இருப்பதை தொலைக்காட்சி மூலம் அறிந்துகொள்ளும் லக்‌ஷ்மி அதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆவலில் சென்னை டான்ஸ் அகாடமியில் சேர நினைக்கிறாள். ஆனால், பெற்றோருடன் வந்தால்தான் அங்கு சேர முடியும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதனிடையே பள்ளிக்குப் போகும் வழியில் காபி ஷாப்பில் இசைக்கும் இசையால் உற்சாகமாகி அங்கேயே ஆட ஆரம்பித்து, அந்த காபி ஷாப் உரிமையாளர் கிருஷ்ணாவுடன் (பிரபுதேவா) பேசிப் பழகும் லக்‌ஷ்மி அவரை அப்பாவாக நடிக்கச் சொல்கிறாள். அதன்மூலம் டான்ஸ் அகாடமியில் சேர்கிறாள். ஆனால், போட்டியில் கலந்துகொள்வதற்கு லக்‌ஷ்மி தகுதி பெறவில்லை. இதனால் கலங்கி நிற்கும் லக்‌ஷ்மியை கிருஷ்ணா தேற்றி, டான்ஸ் அகாடமியில் அவரைத் தேர்வு செய்ய பரிந்துரைக்கிறார்.


உண்மையில் யார் இந்த கிருஷ்ணா, அவர் சொன்னவுடன் எப்படி லக்‌ஷ்மியைத் தேர்வு செய்கிறார்கள், இதனால் கிருஷ்ணாவுக்கு விதிக்கப்படும் நிபந்தனை என்ன, ஏன் நந்தினி தன் மகளை டான்ஸ் ஆடக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கிறாள், அம்மாவுக்கே தெரியாமல் ஏன் லக்‌ஷ்மி டான்ஸ் ஆடுகிறாள், தன் கனவை லக்‌ஷ்மியால் அடைய முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
நடனத்தை மையமாகக் கொண்டு ஒரு முழுப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய். அதில் சில தருணங்களை உணர்வுப்பூர்வமாக்கி நெகிழ வைத்திருக்கிறார்.
அலட்டிக்கொள்ளாமல் அளவாக நடிப்பது பிரபுதேவாவின் இயல்புதான். ஆனால், எமோஷலான சில காட்சிகளிலும் அந்த அளவைக் கடைப்பிடித்திருப்பது நெருடல். நீங்க இதை நடனம்னு சொல்றீங்க, நான் இதை மூச்சுன்னு சொல்வேன் என கவிதையை நடனமாகக் காட்சி ரீதியாக வெளிப்படுத்தும் விதத்தில் பிரபுதேவா அசத்துகிறார். தன் மாணவர்களுக்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை உணர்வை, ஆற்றலை வெளிக்கொணர்ந்து பெஸ்ட் பெர்பாமன்ஸை கொண்டுவரச் செய்வதில் சிறந்த மாஸ்டர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
தித்யா தமிழ் சினிமாவின் புதுவரவு. காபி ஷாப், பஸ் ஸ்டாப், சாவு மேளம், சாலை என இடம் பொருள் பற்றிக் கவலைப்படாமல் எனர்ஜியுடன் டான்ஸ் ஆடும் விதத்தில் கவனம் ஈர்க்கிறார். குருவின் ஏக்கத்தையும் தனக்கான கனவாக மாற்றிக்கொள்ளும் இடத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை. கிடைத்த இடங்களில் தன்னை தக்கவைத்துக் கொண்டார். கருணாகரனைப் படத்தில் வீணடித்திருக்கிறார்கள். கோவை சரளாவின் கதாபாத்திரம் சரியாகக் கட்டமைக்கப்படவில்லை. ஆனாலும், தன் பாவனைகளால் அப்பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
அர்ஜுனாக நடித்திருக்கும் ஜீத் தாஸும், அர்னால்டாக நடித்திருக்கும் அக்‌ஷத் சிங்கும் சிரிப்பைப் படர விட்டு, நடனத்தில் வெளுத்து வாங்குகிறார்கள். போட்டிக்கு சவால் விட்டு எதிர்வினையாற்றும் சல்மான் யூசுஃப்கான் கச்சிதமான தேர்வு.
சென்னை- மும்பை நகரங்களின் அழகை கண்களுக்கும் கடத்தி இருக்கும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கதையிலும் பங்களிப்பு செய்திருக்கிறார். சாம் சி.எஸ். இசையில் ஆலா ஆலா, புலியாட்டம் பப்பரப் பப்பா, இறைவனே இறைவனே உந்தன் அருள்பொழிவாயா பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. உயிரோட்டமான பின்னணி இசையால் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். ஆண்டனியின் எடிட்டிங் நேர்த்தி.
இந்தி ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் சூப்பர் டான்ஸராகப் பின்னி எடுத்த தித்யாவைக் கதையின் நாயகியாக்கி அவர் கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் டைட்டிலாக வைத்திருக்கிறார் இயக்குநர் விஜய். டான்ஸ் மாஸ்டர் கதபாத்திரத்தில் பிரபுதேவாவை நடிக்க வைத்து கதாபாத்திரத் தேர்வில் தேர்ந்த இயக்குநருக்கான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சென்னை நடனக்குழுவில் டான்ஸ் ஆடத் தெரிந்த அக்‌ஷத் சிங், ஜீத் தாஸ் ஆகியோரைப் பயன்படுத்தி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது.
ஆனால், காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லாமல் நாடகப் பணியே மேலோங்கி இருப்பது உறுத்தலாக இருக்கிறது. தித்யா எதேச்சையாக காபி ஷாப்பில் நுழைவது, அங்கு இருக்கும் இசையின் லயத்திற்கேற்ப ஆடுவது, அதை உரிமையாளர் அனுமதிப்பது, பின் அவரே டான்ஸ் அகாடமியில் சேர்ப்பது எல்லாம் செயற்கையாகவே உள்ளது. பள்ளி முதல்வர்- தித்யா காட்சிகளும் நம்பும்படி இல்லை.
தித்யாவின் தந்தை யார் என்பதற்கும் படத்தில் பதில் இல்லை. பிரபுதேவாவின் கடந்த கால வாழ்க்கையையும் போதுமான அளவுக்குச் சொல்லப்படவில்லை. மிக முக்கியமான பிரிவுக்கான காரணத்தை வசனங்களிலேயே கடந்துபோவது ஏற்புடையதாக இல்லை. இவற்றைத் தாண்டி, கடைசி 25 நிமிட உணர்வுப்பூர்வ தருணங்கள் லக்‌ஷ்மியுடன் ஒரு ஒட்டுதலை ஏற்படுத்துகின்றன. மேடையில் இருக்கும் ஆணிகளை அப்புறப்படுத்தும் தித்யா அண்ட் கோவின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கிளைமேக்ஸ் காட்சி அழுத்தத்தின் உச்சம்.

From இண்டு

60 வயது மாநிறம் படத்தின் sneak peek


Thursday, 23 August 2018

வெளியானது ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் ஃபர்ஸ்ட்லுக்

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.  வீரம், வேதாளம், விவேகம் படத்துக்குப் பின் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித், தற்போது நடித்துள்ள படம் விஸ்வாசம்.
இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வயதான தோற்றத்தை படம்பிடித்த படக்குழுவினர். அவரின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை எடுத்து வருவதாக தெரிகிறது.


இதில் நயன்தாரா, கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பிராமய்யா நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நள்ள வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்பதையும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். 

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘கனா’ டீஸர்


Sunday, 27 May 2018

கவுண்டமணி

கோயம்புத்தூர் மாவட்டம் கண்ணம்பாளையம் அருகில் உள்ள வல்லக்குண்டாபுரம் எனும் சிற்றூரில் 1939 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி பிறந்தவர் கவுண்டமணி. இவரது இயர் பெயர் சுப்பிரமணி. தந்தை பெயர் கருப்பையா. தாயார் பெயர் அன்னாம்மாள் என்கிற் காளியம்மாள். இவக்கு மயிலாத்தாள் என்கிற சகோதரி உள்ளார்.



வீட்டில் ஒரே பையன் என்பதால் செல்லம் அதிகம். அவரை அவரது தந்தை அடிக்காமல் வளர்த்தார். சின்ன வயதில் இருந்தே அவருக்கு நாடகத்தில் நடிப்பதென்றால் கொள்ளை ப்ரியம். அதனால் எப்போது பார்த்தாலும் பள்ளிக்கூடம் போகாமல் நாடகம் பார்க்கவே ஆசைப் படுவாராம். அதனால் அவரது விருப்பப் படியே விட்டுவிட்டாராம் தந்தை.
இப்போது சினிமாவில் இத்தனை வாய் பேசும் கவுண்டமணி, சிறு வயதில் அதிர்ந்து பேச மாட்டாராம். பேசினாலும் மெதுவாகத்தான் பேசுவாராம். ஒரு முறை அக்ரஹாரத்தில் நடந்த ஒரு நாடகத்தில் கவுண்டர் வேடத்தில் நடித்தாராம் கவுண்டமணி. நாடகம் முடிந்ததும் வாழ்த்திப் பேச வந்தவர், ‘‘சுப்பிரமணி அருமையாக நடித்துள்ளார். கவுண்டர்கள் எப்படிப் பேசுவார்களோ அதே போல் ஏற்ற இறக்கத்தில் அற்புதமாக பேசி நடித்தார். அதனால் இன்று முதல் சுப்பிரமணியை கவுண்டமணி என்றே அழைப்போம்’’ என்று பாராடினாராம். அன்றிலிருந்துதான் ‘கவுண்டமணி’யானார் இவர்.
15 வயதில் ‘நானும் நாடகத்தில் நடிக்கப் போகிறேன்’ என்று விடாமல் நச்சரித்ததால் அவரது சகோதரி அவரை சென்னைக்கு அழைத்து வந்து பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்த்து விட்டாராம். பிறகு எம்.ஆர்.ஆர்.வாசு, ஓ.ஏ.கே.தேவர் நாடகங்களில் நடித்து, பாரதி ராஜா இயக்கிய 16 வயதினில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளில் நடித்து பெரும் வெற்றி கண்டார். இரண்டு தலைமுறை ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது கொங்கு தமிழ் பேச்சும் வெறுப்பு கலந்த உரையாடல்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
கரகாட்டக்காரன், சின்னத்தம்பி, சின்னக்கவுண்டர், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, நடிகன், மன்னன், இந்தியன், நாட்டாமை, மாமன் மகள், உனக்காக எல்லாம் உனக்காக, முறை மாமன், சூரியன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த் என பல படங்களில் அவரது நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன.
ராஜா எங்க ராஜா’, ‘பிறந்தேன் வளர்ந்தேன்’ உள்ளிட்ட பன்னிரெண்டு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ ‘வரவு எட்டணா செலவு பத்தணா’போன்ற சில படங்களில் குணசித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்
கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இவர் மட்டும் சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது வாய்மை மற்றும் 49ஓ படங்களில் நடித்து வருகிறார். கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்.
திரைப்படங்களில் காதலர்களுக்கு உதவும் வேடங்களில் நடித்து பாராட்டு பெற்ற இவர், நிஜத்தில் காதல் திருமண்ம் செய்து கொண்டவர். மனைவி பெயர் சாந்தி. இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.
கவுண்டமணிக்கு புகைப் பழக்கமோ, குடிப் பழக்கமோ, கிடையாது. பார்ட்டிகளுக்கு கூடப் போவதில்லை. தனது பெயருக்கு முன்னால் எந்தப் பட்டங்களும் போட்டுக் கொள்வதில்லை. இவர் பெரிதாகப் படித்தவரில்லை என்றாலும், நிறைய புத்தகங்களை வாசித்தவர். ஒஷோவின் அனைத்து புத்தகங்களையும் கரைத்துக் குடித்தவர்.
ஆங்கிலப்படங்கள் எதுவானாலும் பார்த்து விடுவார். படத்தைப் பற்றி நண்பர்களுடன் பேசுவார். ஆனால், தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார். அதே போல பேட்டி என்றால் அட போங்கப்பா என்று நாம என்ன செய்துவிட்டோம் என்று அன்பாக மறுத்து விடுவார்.
கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. புதிதாக உருவாகும் நகைச்சுவை நடிகர்கள் எவருமே இவரது சாயல் இல்லாமல் நகைச்சுவை செய்யமுடியாது.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...