இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 15 மில்லியன் மக்கள் ஆர்த்ரிடிஸ் என்னும் மூட்டு வீக்க வலியால் அவஸ்தைப்படுகிறார்கள். ஆர்த்ரிடிஸ் என்பது ஒரு வகையான மூட்டு நோய். இது பெரும்பாலும் 45 வயதிற்கு மேல் தான் ஒருவரைத் தாக்கும். ஒருவருக்கு மூட்டு பிரச்சனைகள் வருவதற்கு உடல் பருமனும் ஓர் காரணம். அதோடு மரபணு காரணிகள், வளர்சிதை மாற்றத்தில் உள்ள மாற்றங்கள் மற்றும் செக்ஸ் ஹார்மோன்கள் போன்றவைகளும் தான்.

ஒருவருக்கு ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருந்தால், அது மூட்டுப் பகுதியில் வீக்கம், தாங்க முடியாத கடுமையான வலி, மூட்டு அசைவுகளில் சிரமத்தை சந்திப்பது, பலவீனமான மூட்டு இணைப்புக்கள் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். ஆர்த்ரிடிஸ் பிரச்சனை ஒருவருக்கு இருந்தால், உணவுகளில் கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த உணவுகள் மூட்டு இணைப்புக்களில் உள்ள பிரச்சனையை தீவிரமாக்கிவிடும்.
மீன்
ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ள நோயாளிகள் தினமும் 1 கிராம் மீன் எண்ணெயை உட்கொள்வதன் மூலம், ஆர்த்ரிடிஸ் வலி குறைவதோடு தடுக்கப்படும். மேலும் மீன் எண்ணெயில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், மூட்டுக்களில் உள்ள அழற்சியைக் குறைத்து, வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். வேண்டுமானால் அடிக்கடி மீன்களை வாங்கி சமைத்தும் சாப்பிடலாம். இதனாலும் ஆர்த்ரிடிஸைக் குறைக்கலாம்.
மஞ்சள்
ஆய்வுகளில் மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவதோடு, மூட்டு அழற்சியைத் தடுத்து குறைப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனையைக் கொண்டவக்ரள் 2 கப் நீரை கொதிக்க வைத்து, அதில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வர, ஆர்த்ரிடிஸைத் தடுக்கலாம்.
பசலைக்கீரை
பசலைக்கீரை ஆர்த்ரிடிஸ் பிரச்சனையால் வலியை சந்திப்போருக்கு மிகவும் நல்லது. இந்த கீரையை உட்கொண்டால், ஆர்த்ரிடிஸ் பிரச்சனையால் சந்திக்கும் வலி குறையும். பசலைக்கீரையில் உள்ள வைட்டமின் கே, எலும்பு மற்றும் குருத்தெலும்புகளில் இருக்கும் வைட்டமின் கேவை சார்ந்துள்ள புரோட்டீன்களுக்கு அவசியமானதாகும். எனவே வைட்டமின் கே குறைபாடு உடலில் இருந்தால், எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளில் உள்ள புரோட்டீன் சரியாக வேலை செய்யாமல், மூட்டு வளர்ச்சியைப் பாதித்து, ஆர்த்ரிடிஸ் அபாயத்தை அதிகரிக்கும்.
பூண்டு மற்றும் வெங்காயம்
பூண்டு ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை தடுக்க உதவும். அல்லிசின் பண்புகள் நிறைந்த காய்கறிகளான பூண்டு மற்றும் வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், இவற்றை அன்றாட உணவில் சேர்த்து வர, அது மூட்டு வலி, அழற்சி மற்றும் குருத்தெலும்பு பாதிப்பு போன்றவற்றைத் தடுக்கலாம்.
இஞ்சி
மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி, உடலில் வெப்பத்தை அதிகரிப்பதோடு, அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இஞ்சி தசை வலி மற்றும் மூட்டுக்களில் உள்ள அழற்சியைக் குறைக்கும். எனவே ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருப்பவர்கள், இஞ்சியை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
வைட்டமின் சி கொலாஜன் வளர்ச்சி மற்றும் இணைப்புத் திசுக்களுக்கு அவசியமான முக்கிய சத்தாகும். கொலாஜன், மூட்டு மற்றும் எலும்புகளில் உள்ள குருத்தெலும்புகளில் இருக்கும் முக்கிய பொருளாகும். எனவே வைட்டமின் சி நிறைந்த உணவுகளான சிட்ரஸ் பழங்கள், குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, ப்ராக்கோலி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் கீரைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது.
எண்ணெய்கள்
நட்ஸ் எண்ணெய்களான வால்நட்ஸ் எண்ணெய், கனோலா எண்ணெய், நெய், சோயா பீன்ஸ் எண்ணெய், ஆளி விதை எண்ணெய், ஆலிவ் ஆயில் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் மூட்டு அழற்சியைக் குறைக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூட்டு வலி மற்றும் மூட்டுக்களில் ஏற்படும் பிடிப்பைக் குறைத்து நிவாரணம் அளிக்கும். எனவே ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள்.
ஆதாரம் tamil.boldsky.com