கோவாவில் கணக்காளர் அரசுப் பணிக்கான தேர்வு முடிவு வெளியானதில் தேர்வு எழுதிய 8 ஆயிரம் பேரும் பெயிலாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டதாரிகள் மட்டும் இத்தேர்வு எழுத தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் 100 க்கு குறைந்தபட்சம் 50 மதிப்பெண்கள் கூட அவர்கள் பெறவில்லை என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோவாவின் கணக்குத்துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ''கோவா அரசு அலுவலகங்களில் கணக்காளர் பதவிக்கு 80 காலியிடங்கள் ஏற்பட்டன. இதற்கான தேர்வு ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று தேர்வு எழுதிய ஒரு விண்ணப்பதாரர் கூட தேர்ச்சியடையவில்லை.
சாதாரண கணக்காளர் பதவிக்கான தேர்வு விளம்பரத்தை கணக்குகள் இயக்குநரகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டிருந்தது. 5 மணிநேர தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, கணக்கு தொடர்பான கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு 100 மதிப்பெண்கள். இதில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெறுவதற்கு தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் இவர்கள் வாய்மொழி நேர்முகத் தேர்வுக்கு முன்பு நடத்தப்படும் இறுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருப்பார்கள்.'' என்று கணக்குகள் இயக்குநர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் கோவா பொதுச் செயலாளர் பிரதீப் பட்கோங்கர் தேர்வு முடிவு குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முதலில் தேர்வு முடிவு வெளியாக ஏன் இவ்வளவு காலம் ஆனது என்ற கேள்வி எழுகிறது. தேர்வு எழுதிய 8 ஆயிரம் பேரும் ஒரு தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்றால் மாநிலத்தின் கல்வி முறை சீர்குலைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. இது பட்டதாரிகளை உருவாக்கும் கோவா பல்கலைக்கழகத்திற்கும் வணிக கல்லூரிகளுக்கும் மிகப்பெரிய அவமானம்'' என்று பிரதீப் பட்கோங்கர் தெரிவித்துள்ளார்.