Tuesday, 14 August 2018

சோகத்திலும் நெகிழ்ச்சி: அணையின் மதகுகளை மூடி காட்டு யானையைக் காப்பாற்றிய கேரள மக்கள்

கேரள மாநிலத்தில் 11 மாவட்டங்கள் மழையிலும், வெள்ளத்திலும் மிதந்து சோகம் சூழ்ந்த நிலையிலும், அணையின் மதகுகளை ஒரு மணிநேரம் மூடி, காட்டாற்றில் சிக்கிய யானையைக் காப்பாற்றியுள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் மழை கடந்த ஒரு வாரமாகத் தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அணைகள் நிரம்பித் திறந்துவிடப்பட்டுள்ளன. 11-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கடந்த 3 நாட்களில் மட்டும் 40 பேர் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் உயிரிழந்துள்ளனர். இதனால், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால், மாநிலமே மழையின் காரணமாக சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்தச் சூழலில் திருச்சூர் மாவட்டம், அதிரம் பள்ளி அருகே சாலக்குடி ஆறு செல்கிறது, இந்த ஆற்றுக்கு நீர்வரத்து பெருங்களக்கூத்து அணையில் இருந்து வருகிறது. இந்த அணை மொத்தக் கொள்ளவை எட்டியதைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை, சாலக்குடிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது, ஆற்றின் நடுவே பாறைகளுக்கு இடையே காட்டு யானை ஒன்று நீண்ட நேரமாக நின்று இருந்தது.
இதைப் பார்த்த அப்பகுதி மக்களும், காட்டில் வசிக்கும் பழங்குடியினரும், யானை குளிப்பதற்கும், தண்ணீர் குடிக்கவும் வந்திருக்கிறது என்று நினைத்தனர். ஆனால், நீண்ட நேரமாகியும், யானை அதே இடத்தில் நின்று இருந்ததால், ஆற்றைக் கடக்க முடியாமல் திணறுகிறது என்பதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, கிராம மக்களும், பழங்குடியினரும், மின்வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறையினர், வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். மற்ற யானைகள் ஆற்றைக் கடந்துவிட்ட நிலையில், ஒரு யானை மட்டும் காட்டாற்றில் சிக்கி இருக்கிறது. இந்த யானை ஆற்றைக் கடக்கவேண்டுமானால், அணையைச் சிறிதுநேரம் மூட வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர்.
அப்போதுதான் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறையும், யானையும் கடக்க முடியும் என்றனர். ஆனால், முதலில் மறுத்த அதிகாரிகள், அதன்பின் யானையின் நிலையைப் பார்த்து, அணையின் மதகுகளை ஒரு மணிநேரம் மூடினர். ஆற்றில் படிப்படியாக குறைந்த நீர், அரை மணிநேரத்தில் குறைந்தது. இதையடுத்து, யானை பாதுகாப்பாக நடந்து, மறுகரையில் ஏறி வனப்பகுதிக்குள் சென்றது.
இது தொடர்பாக சர்ப்பா பகுதி வனச்சரக அதிகாரி முகமது ராபி கூறியதாவது:
''கிராம மக்கள் தகவல் அளித்ததும் இங்கு வந்து பார்த்தோம். யானை தண்ணீர் குடிக்கிறது என்று முதலில் நினைத்தோம். ஆனால், யானை தனது துதிக்கையை வைத்து ஆற்றுநீரின் வேகத்தைக் கணித்துக் கொண்டிருந்தது. அதன்பின், வனத்துறை சார்பில் அணையின் கட்டுப்பாட்டு அதிகாரிகளையும், மின்வாரிய அதிகாரிகளையும் தொடர்புகொண்டு விவரங்களைக் கூறினோம்.
அவர்கள் அணையின் மதகுகளை ஒரு மணிநேரம் மூடுவது மிகவும் ஆபத்தானது. ஒருவேளை யானை சென்றுவிட்டால், பிரச்சினையில்லை. இல்லாவிட்டால், ஒரு மணிநேரத்துக்குப் பின் அணையின் மதகுகளைத் திறக்கும்போது, வழக்கத்தைக் காட்டிலும் இரு மடங்கு நீர் ஆற்றில் பாயும், அப்போது யானை ஆற்றின் குறுக்கே இருந்தால், அடித்துச் சென்றுவிடும் என்று எச்சரித்தனர்.
மேலும், அணையின் மதகுகளை மூடினால், அரை மணிநேரத்துக்குப் பின்புதான் ஆற்றில் நீரோட்டம் குறையும் என்று தெரிவித்தனர். பலவிதமான தீவிர யோசனைக்குப் பின் அணையின் மதகுகள் இறக்கப்பட்டு ஒரு மணிநேரம் மூடப்பட்டது. ஆற்றில் படிப்படியாக நீர் குறைந்தவுடன் யானை மறுகரைக்குக் கடந்து சென்றது. ஆற்றைக் கடந்து செல்லும் போது, யானை நன்றியுணர்வுடன் திரும்பிப் பார்த்து துதிக்கையை உயர்த்திப் பிளிறியதைப் பார்த்து கிராம மக்களும், அதிகாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.''
இவ்வாறு முகமது ராபி தெரிவித்தார்

அமராவதி அணையின் இன்றைய நிலவரம்

தேதி : 14.08.2018
இருப்பு : 87.96 அடி
வரவு  : 2966 கன அடி
வெளியேற்றம் : 2935 கன அடி
ஆறு : 2430 கன அடி
வாய்க்கால் : 440 கன அடி

திருமூர்த்தி அணையின் இன்றைய நிலவரம்

தேதி : 14.08.2018
இருப்பு : 50.00 அடி
நிர் வரத்து  : 951 கன அடி
வெளியேற்றம் :  888 கன அடி

முல்லைப் பெரியாறு நீர்மட்டம் கிடுகிடு உயர்வு: தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தமிழத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்த வேண்டும் என தமிழகம் தொடர்ந்து கோரி வருகிறது. ஆனால், அணைக்கு பாதுகாப்பு இல்லை என்றுக் கூறி இந்த கோரிக்கையை ஏற்க கேரளா மறுத்து வருகிறது.
கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருவதால் 26 ஆண்டுகளுக்கு பின் இடுக்கி அணை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களாக அங்கு மழை குறைந்துள்ளால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து, சற்று இயல்பு நிலை திரும்பி வருகிறது.
அதேசமயம் முல்லைப் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உயர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாறில் இருந்து திறக்கப்படும் நீர், இடுக்கி அணையை சென்று அடையும். இடுக்கி அணைக்கு கூடுதல் நீர் வந்து சேதம் ஏற்படும் என்பதால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்குமாறு கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனால் கேரளாவின் பாதுகாப்பு கருதி முல்லைப்பெரியாறு அணையில் தற்போது கூடுதல் நீர் தேக்கப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வழக்கமா தேக்கப்படும் அளவான 136 அடியை தாண்டியது. இன்று காலை நிலவரப்படி 136.40 அடி என்ற அளவில் தண்ணீர் உள்ளது.
தமிழகத்துக்கு வழக்கமாக 2,200 கன அடி நீர் திறக்கப்படும். ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் தமிழகத்துக்கு விநாடிக்கு 4,419 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
142 அடியை வரை மட்டுமே முல்லைப்பெரியாறில் தேக்கி வைக்க முடியும் அதற்கு மேல் தண்ணீர் இடுக்கி அணைக்கு செல்லும் என்பதால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
THE HINDU

கனமழை பாதிப்பால் ஓணம் கொண்டாட்டம் ரத்து: கேரள அரசு அறிவிப்பு

கனமழையால் உருகுலைந்துள்ள கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 39 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அங்கு மழை சற்று குறைந்திருந்த ந நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே கனமழை பாதிப்பையடுத்து இந்த ஆண்டு ஓணம் கொண்ட்டாட்டங்களை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரள அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு முதல்வர் பினராயி விஜயன் இதனை அறிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில் ‘‘கனமழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்புகளை கேரளா சந்தித்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். வீடு, உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் ஓணம் பண்டிகையை அரசு சார்பில் வழக்கம் போல் கொண்டாடுவது சரியாக இருக்காது. எனவே இந்த ஆண்டு அரசு சார்பில் நடக்கும் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன. முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நடைபெறும்’’ எனக் கூறினார்.
From THE HINDU

கடந்த 117 ஆண்டுகளில் இல்லாத பெருமழை: சிம்லாவில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது

கடந்த 117 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில், நேற்று ஒரே நாளில் மட்டும் 172.6 மி.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிம்லா வானிலை மையத்தின் இயக்குநர் மன்மோகன் சிங் கூறுகையில், ''சிம்லாவில் நேற்று (13-ம் தேதி) ஒருநாளில் மட்டும் 172.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 117 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெருமழையாகும். இதற்கு முன் கடந்த 1901-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 277 மி.மீ. மழை பதிவானது. அதன்பின் இப்போது இந்த அளவு அதிகமான மழை பெய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இமாச்சலப் பிரதேசத்திலும் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 73.8 மி.மீ. மழை பதிவானது. இதற்கு முன் கடந்த 2011-ம் ஆண்டு 75 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் மாநிலம் முழுவதும் சராசரியாக 73.8 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கமாகப் பெய்யும் மழையின் அளவைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாகும்.
மாநிலத்தில் உள்ள லாகுல், ஸ்பிதி மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் பருவமழையின்போது, மிக அதிகமான மழை பெய்திருக்கிறது'' எனத் தெரிவித்தார்.

கேரளாவுக்கு மீண்டும் ‘சோதனை’ - தமிழக அணை திறப்பால் வெள்ள அபாயம்

தமிழகத்தில் உள்ள அப்பர் பவானி அணை இன்று மாலை திறக்கப்படுவதால் கேரள மாநிலம் அட்டப்பாடியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 39 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பியதால் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இடுக்கி, மலம்புழா, எடமலையார் உள்ளிட்ட அணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவின் வடக்கு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மலம்புழா அணைக்கு தண்ணீர் கொண்டு சேர்க்கும் கல்பாத்தி அணை இன்று காலை நிரம்பியது. இதனால் அந்த அணை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மலம்புழா அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் அந்த நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
இதுபோலவே பாலக்காடு மாவட்டம் வாளையாறு அணையும் இன்று நிரம்பியது. அணை எந்தநேரமும் திறக்கப்படலாம் என தெரிகிறது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி அணை அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. இந்த அணை இன்னும் சில மணிநேரங்களில் திறக்கப்பட உள்ளது.
இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் முழுவதும் கேரளாவின் அட்டப்பாடி வழியாக ஆற்றில் சென்று கடலில் கலக்கும். இதனால் அட்டப்பாடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...