கடந்த 117 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில், நேற்று ஒரே நாளில் மட்டும் 172.6 மி.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிம்லா வானிலை மையத்தின் இயக்குநர் மன்மோகன் சிங் கூறுகையில், ''சிம்லாவில் நேற்று (13-ம் தேதி) ஒருநாளில் மட்டும் 172.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 117 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெருமழையாகும். இதற்கு முன் கடந்த 1901-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 277 மி.மீ. மழை பதிவானது. அதன்பின் இப்போது இந்த அளவு அதிகமான மழை பெய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இமாச்சலப் பிரதேசத்திலும் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 73.8 மி.மீ. மழை பதிவானது. இதற்கு முன் கடந்த 2011-ம் ஆண்டு 75 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் மாநிலம் முழுவதும் சராசரியாக 73.8 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கமாகப் பெய்யும் மழையின் அளவைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாகும்.
மாநிலத்தில் உள்ள லாகுல், ஸ்பிதி மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் பருவமழையின்போது, மிக அதிகமான மழை பெய்திருக்கிறது'' எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment