Sunday, 19 August 2018

10 நாட்கள் போலீஸாருடன் நின்று போக்குவரத்தை சீர் செய்யவும்: கோவையில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு வினோத தண்டனை

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீஸாருடன் தகராறு செய்து தாக்கிய இளைஞரை 10 நாட்கள் போக்குவரத்துப் போலீஸாருடன் நின்று போக்குவரத்தைச் சரிசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார் இரு சக்கர வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி ஆவணங்களை கேட்டனர். மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்த வடவள்ளியைச் சேர்ந்த இளைஞர் சுதர்சன் அங்கிருந்த காவல் துறையினருடன் தகராறில் ஈடுபட்டுத் தாக்கினார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்தினர். அவரது வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் வழக்கமாக அவருக்கு அளிக்க வேண்டிய தண்டனைக்கு மாறாக போலீஸாரின் கஷ்டத்தை அந்த இளைஞர் தெரிந்துக்கொள்ள வேண்டும், அதை அவர் உணரவேண்டும் என்பதற்காக அவருக்கு வினோத தண்டனையை வழங்கினார்.
அதன்படி சுதர்சன், போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து கோவை பிரதானச் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும், தினமும் பணியை முடித்து சரியாக பணியாற்றியதாக அதிகாரி முன் கையொப்பமிட்டுச் செல்லவேண்டும் என்று உத்தரவிட்டார்.
நீதிமன்ற நடுவரின் உத்தரவை அடுத்து இன்று காலைமுதல் வேகாத வெயிலில் கோவை ஆம்னி பேருந்து நிலையம் முன்பு வேர்க்க விறுவிறுக்க போக்குவரத்தைச் சரி செய்யும் பணியில் சுதர்சன் ஈடுபட்டார்.
நீதிமன்ற நடுவரின் உத்தரவை வரவேற்றுள்ள போலீஸாரும் பொதுமக்களும், இதே போன்று சாலையில் வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டுகிற, மோட்டார் ரேஸ் செல்லுகிற இளைஞர்களுக்கு 10 நாட்கள் அவசர சிகிச்சை விபத்து வார்டில் பணியாற்றும் வேலையை அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...