மாடுகளுக்குப் பாரம்பர்ய முறை மூலம் வைத்தியம் செய்துகொள்கிறார், தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மகேஷ். ஒரு காலைவேளையில் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த மகேஷைச் சந்தித்தோம்.

“என்கிட்ட எட்டு நாட்டு மாடுகள் இருக்கு. தினமும் காலையில 8 மணிக்குள்ள மாடுகளைக் குளிப்பாட்டிடுவேன். வெயில் வந்த பிறகு குளிப்பாட்டினால், சூட்டைக் கிளப்பிடும். தினமும் குளிப்பாட்டினாலே உடம்புல உஷ்ணம் அதிகமாகுறதைத் தவிர்த்துடலாம். கோடைக்காலத்துல பத்து மணிக்குள்ள மேய்ச்சலை முடிச்சிடுவோம். பிறகு சாயந்தரம் 4 மணிக்கு மேலதான் மேய்ச்சலுக்கு விடுவோம். அதனால, வெப்பத்துல இருந்து மாடுகளைக் காப்பாத்திட முடியுது. நான் ஏழு வருஷமா என்னோட மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்தான் செஞ்சுக்கிட்டுருக்கேன். வீட்டு அஞ்சறைப்பெட்டியிலேயே ஆடு மாடுகளுக்குத் தேவையான பாதி மருந்துகள் இருக்கு.

கோடைக்காலத்துல மாடுகளுக்குக் காய்ச்சல் வர வாய்ப்பிருக்கு. 10 கிராம் மஞ்சள்தூள், 10 கிராம் மிளகு, 10 கிராம் வெந்தயம், 10 கிராம் சீரகம், 2 பூண்டு, ஒரு கைப்பிடி வேப்பிலை, ஒரு கைப்பிடித் துளசி, 5 வெற்றிலை, 100 கிராம் நாட்டுச்சர்க்கரை, ஒரு கைப்பிடி திருநீற்றுப்பச்சிலை எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து அரைச்சுக் கொடுத்தா காய்ச்சல் குணமாகிடும். இது ஒருவேளைக்கான அளவு. இது மாதிரி தினமும் ரெண்டு வேளைனு, மூணு நாள் கொடுத்தால் போதும்.
மாடுகளுக்கு மடிவீக்க நோய் வந்தால், 30 சோற்றுக்கற்றாழை மடல்கள், 20 கிராம் மஞ்சள் தூள், ஒரு சுண்டைக்காய் அளவு சுண்ணாம்பு மூணையும் சேர்த்து நல்லா அரைச்சு மடியில தடவணும். தினமும் 3 வேளை 3 நாள்களுக்குத் தடவிவந்தால் மடிநோய் குணமாகிடும்” என்றார்.
தொடர்புக்கு, மகேஷ், செல்போன்: 87549 69831.
தொடர்புக்கு, மகேஷ், செல்போன்: 87549 69831.
From Vikatan
No comments:
Post a Comment