கேரளாவில் வரலாறு காணாத மழையினால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனையடுத்து கோழிக்கோட்டில் உள்ள கண்ணப்பன்குன்டு கிராமத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதால் கிராமமே வெறிச்சோடிக் கிடக்கிறது.
மழை புதன் காலை வரையிலும் தொடர்ந்தது. மலையிலிருந்து நீர்ப்பாய்ச்சல் அதிகம் இருக்கும் என்பதாலும் நிலச்சரிவு அபாயத்தினாலும் கண்ணப்பன்குன்டு கிராமம் முழுதும் காலிசெய்யப்பட்டுள்ளது.
தேசியப் பேரிடர் நிவாரணப் படை உள்ளூர் என்.ஜி.ஓ.க்களின் அயராத ஆதரவுடனும் தனிநபர்களின் ஆதரவுடனும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். சுமார் 2 டஜன் வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இந்த கிராமத்திலிருந்த அனைத்து சாலைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.
கோழிக்கோட்டிலிருந்து 45 கிமீ தூரத்தில் இருக்கும் கண்ணப்பன்குன்டு கடந்த வார வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் பெரிதும் பாதிக்கப்பட்ட கிராமமாகும். இந்நிலையில் நேற்று 2 முறை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள நிவாரணக்குழுவின் அயராத பணியினால் சேதம் பெரிதாக ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இவர்கள் பணியினால் உயிர்ப்பலி நிகழவில்லை.
இந்நிலையில் கொச்சி விமான நிலையத்தில் புகுந்துள்ள வெள்ள நீரின் அளவு அதிகரித்து வருவதால் சனிக்கிழமை கூட விமான நிலையம் இயல்பு நிலைக்குத் திரும்புதல் கடினம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலையத்தின் சுவர் ஒரு புறம் இடிக்கப்பட்டு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீரை வெளியேற்ற ராட்சத மோட்டார்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கஞ்சூர் பஞ்சாயத்து, எர்ணாக்குளம் ஆகியவற்றுக்கு உச்சபட்ச எச்சரிக்கையான சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள் நீர் அதிகரித்து வருவதால் மேலும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment