வெப்பச் சலனத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ''தென்மேற்கு வங்கக்கடலில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த சில தினங்களுக்கு வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள் பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்யக்கூடும்.
கேரளா, லட்சத்தீவு, கர்நாடகாவில் அனேக இடங்களிலும், ஆந்திரா, தெலங்கானாவில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 6 செமீ, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 5 செமீ, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, ஆரணி ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது'' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment