Tuesday, 12 August 2014

அள்ளிக் கொடுக்கும் நெல்லி!

நெல்லி

எதற்கும் சரிப்பட்டு வராது’ என ஒதுக்கிவிடப்பட்ட நூறு ஏக்கர் கரட்டு நிலத்தை விலைக்கு வாங்கி... அதில் இயற்கை முறையில் திராட்சை, வாழை, பேரீட்சை, தென்னை, நெல்லி என விதவிதமான பயிர்களை விளை விக்கும் அப்துல் ரகீம் பற்றி ‘தில்லான திராட்சை சாகுபடி’ என்ற தலைப்பில் கடந்த இதழில் எழுதியிருந்தோம். கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலிருக்கும் சுருளிப்பட்டியில்தான் இதை அவர் சாதித்துக் கொண்டிருக்கிறார்.
‘தில்லான திராட்சை சாகுபடி’ என்ற தலைப்பில் அப்துல் ரகீம் (அலைபேசி: 99945-09966) தோட்டம் பற்றி கடந்த இதழில் எழுதியிருந்தோம். நெல்லி சாகுபடி எப்படி என்பது பற்றி இப்போது பார்ப்போம். 
நீரின் சுவை அது பிறக்கும் நிலத்தால் அமைகிறது. நிலத்தால் திரிந்து போன நீரின் சுவையை கூட்டுவதற்காக நம் முன்னோர்கள் நெல்லியினை மருந்தாக பயன்படுத்தியிருக்கிறார்கள். கிணற்று நீர் உவர்ப்பாக இருந்தால் அதனுள் நெல்லி மரத்தின் வேர்களை போட்டு வைப்பது இன்றும் கூட வழக்கத்தில் இருக்கிறது. ‘ஒரு கூடை ஆப்பிளுக்கு ஒரு பெருநெல்லி சமம்’ என்கிறது அறிவியல். மருத்துவத்திலும் நெல்லியின் பங்கு மகத்தானது. உடலில் உள்ள திசுக்களை நீண்ட நாள் இளமையுடன் வைத்திருக்கும் தன்மையுள்ளது. இத்தனை சிறப்புள்ள நெல்லி, ''தன்னை பயிரிடும் விவசாயிகளுக்கு வருமானத்தை கிள்ளிக் கொடுக்காமல் அள்ளியே கொடுக்கிறது'' என்று சந்தோஷமாகச் சொல்கிறார் அப்துல் ரகீம்! 
‘‘எந்தப் பயிரும் வராதுனு சொல்லப் பட்ட இந்த இடத்தை நம்பிக்கையோட வாங்கினதும் முதன்முதல்ல நான் நட்டது நெல்லிதான். அது கொடுத்த தைரியத் துலதான் மத்தமத்த வெள்ளாமை பக்கமும் நான் கவனத்தைத் திருப்பி னேன். வறட்சியை தாங்குற அருமையான பயிரு நெல்லி. தண்ணியும் அதிகமாத் தேவைப்படாது. எல்லா மண்ணுலயும் வரும். ஆழமான மண் கண்டமும் தேவைப்படாது. அஞ்சி ஏக்கர்ல பி.எஸ்.ஆர்-1 ரகத்தை மட்டும் வெச்சிருக்கேன். இதை நடவு செய்து ஏழு வருஷமாச்சி. நாலு ஏக்கர்ல என்.ஏ-7, கிருஷ்ணா, சக்கையா, காஞ்சன் ரகங்களைக் கலந்து வெச்சிருக்கேன். இது அஞ்சி வருஷமா இருக்கு. முழுக்க இயற்கை முறை விவசாயம்தான்” என்றவர் சாகுபடி எப்படி என்பது குறித்து பாடமெடுத்தார். அது-
'நிலத்தை நன்றாக உழவு செய்து, செடி நடுவதற்கு தகுந்த இடைவெளி விட்டு 2.5 ஜ் 2.5 ஜ் 2.5 அடி நீள, அகல மற்றும் ஆழத்தில் குழி எடுத்து, ஒரு மாதத்துக்கு அதை ஆறப்போட வேண்டும். செடிக்குச் செடி 20 அடி இடைவெளி தேவை (ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இடைவெளி விடுகிறார்கள்). ஏக்கருக்கு 100 செடிகள் வரும். நடவு செய்யும்போதே தண்ணீர் விட்டால் குழியின் அடிபாகத்தில் சூடு ஏறி, இளம் வேர் கருகிவிடும். எனவே, நடவுக்கு இரண்டு நாள் முன்பாகவே குழிகளில் தண்ணீர் ஊற்றி நன்றாக குளிர வைக்கவேண்டும். பிறகு செடிகளை நடவு செய்யலாம். காலை எட்டு மணிக்குள் ளாகவோ... அல்லது மாலை மூன்று மணிக்கு பிறகோ நடலாம். வெயில் நேரத்தில் நடக்கூடாது.
செடியின் ஒட்டுப்பகுதியில கட்டியிருக்கும் பிளாஸ்டிக் பேப்பரை அகற்றிவிட்டு நடுவது நல்லது. கூடவே, காய்ந்த குப்பை எரு 15 கிலோ, வேப்பம்புண்ணாக்கு அரை கிலோ, மண்புழு உரம் ஒரு கிலோ ஆகியவற்றை குழியி லிருந்து எடுத்த மண்ணோடு கலந்து அடியுரமாகப் போட்டு குழியை மூடி, உயிர்நீர் பாய்ச்சவேண்டும். செடிகளுக்குப் பக்கத்திலேயே, ஏதாவது ஒரு குச்சியை ஊன்றி, இரண்டையும் இணைத்துக் கட்டவேண்டும். அப்போதுதான் செடிகள் சாயாமல் இருக்கும். நடவு செய்த மூன்றாவது மாதத்துக்குப் பிறகு புதிதாக துளிர் வரும். இதைக் கிள்ளி விடவேண்டும். செடி பெரிதாகும் வரை... அதாவது, நான்கு ஆண்டுகள் வரை உளுந்து, நிலக்கடலை என்று ஏதாவது ஊடுபயிர்களை போடலாம்.
சொட்டுநீர்ப் பாசனம் செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும். நடவு செய்த முதல் மூன்று மாதங்களுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு, தண்ணீர் வசதியைப் பொறுத்து வாரத்துக்கு ஒரு தடவை கூட பாய்ச்சலாம்.
ஆறுமாதத்துக்கு ஒரு தடவை ஒரு மரத்துக்கு இருபது கிலோ சாணஎரு மற்றும் இரண்டு கிலோ மண்புழு உரம் வைப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பூச்சித் தாக்குதல் தென்பட் டால், சூடோமோனஸ், பெவேரியா ரெண்டையும் தண்ணீரில் கலந்து அடிக்கலாம். ஒரு ஆண்டு முடிந்ததுமே காய்கள் வந்துவிடும். ஆனால், அதில் மகசூல் பார்க்கக் கூடாது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு செடிகளைக் கிள்ளிவிட வேண்டும். மூன்றாம் ஆண்டு முதல் நல்ல மகசூல் கிடைக்கும். ஆண்டுக்கு இரண்டு முறை மகசூல். ஜூன் மாத கடைசியில் பூ வந்தால், நவம்பர் வரை அறுவடை. ஜனவரியில் பூத்தால் ஏப்ரல் வரை காய் கிடைக்கும். ஒவ்வொரு மகசூல் முடிந்ததும் கவாத்து செய்து, உரம் வைப்பது அவசியம். அப்படி செய்த பதினைந்தாவது நாள் பூக்க ஆரம்பிக்கும். அதிகமாக தண்ணீர் பாய்ச்சினால் பூ உதிர்ந்துவிடும். எனவே... காய்ச்சலும், பாய்ச்சலுமாக இருப்பது நல்லது. மிளகு அளவுக்கு காய் வந்த பிறகு வழக்கமான முறையில நீர் பாய்ச்சலாம். பூத்த இரண்டாவது மாதத்திலிருந்து காய்கள் திரண்டு, அறுவடைக்குத் தயாராகிவிடும்.
பி.எஸ்.ஆர். ரக மரம் ஆண்டு ஒன்றுக்கு 150 கிலோ வரை காய்க்கிறது. மற்ற ரகங்கள் சராசரியாக 100 கிலோ வரை காய்க்கின்றன. இரண்டு அறுவடைக்கும் சேர்த்து ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு பத்து டன் மகசூல் வரும். பி.எஸ்.ஆர். ரகத்தை விட என்.ஏ-7 ரக காய்களுக்கு சந்தையில் நல்ல மரியாதை இருக்கிறது. கடந்த சில மாதத்துக்கு முன் கிலோ முப்பது ரூபாய் வரை போய்க்கொண்டிருந்தது. தற்போது பதினைந்து ரூபாய் விற்கிறது. கவாத்து, உரம், அறுப்பு கூலி என்று ஆண்டுக்கு இரண்டு முறை செலவு வரும். இதைத்தவிர பெரிய செலவுகள் இல்லை'
சாகுபடி பாடத்தை முடித்தவர்,
''நான் முழுக்க இயற்கை முறையில சாகுபடி செய்றதால நம்ம தோட்டத்து நெல்லிக் காய்களுக்கு கேரளாவுல கூடுதல் மரியாதை. தொடர்ந்து அங்கிருந்து வியாபாரிங்க வந்து வாங்கிக்கறாங்க. தோட்டத்தை நல்லா பராமரிச்சா, ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு தாராளமா லட்ச ரூபாய் வருமானம் பார்க்கலாம்” என்று அடித்துச் சொன்னார்!
கன்றுகள் தேர்வில் கவனம் தேவை! 

‘நடவு செய்த கன்றுகள் சரியாக காய்ப்பதில்லை’ என்பதுதான் நெல்லியில் உள்ள முக்கிய பிரச்னை. இதற்கு முக்கிய காரணம்... சரியான, தரமான, கன்றுகளைத் தேர்வு செய்யாததுதான். சில வியாபாரிகள் சரியாக ஒட்டுக்கட்டாத, தரமில்லாத தாய் மரத்திலிருந்து கன்றுகளை உருவாக்கி, லாப நோக்கில் விற்பனை செய்துவிடுகிறார்கள். அதில் கவனமாக இருக்கவேண்டும். சரி, தரமான கன்றுகளை எப்படி தேர்வு செய்வது?
கன்றின் தண்டு பாகம் பருமனாக இருக்கவேண்டும். ஒட்டுக் கட்டியுள்ள பகுதியைப் பிரித்து... ஒட்டு நன்றாக கூடி இருக்கிறதா என்று பார்த்தும் வாங்கவேண்டும். ஒட்டுக்கட்டி மூன்று மாதத்துக்கு மேல் ஆன கன்றாக இருக்கவேண்டும். கூடுமானவரை ஒட்டு கட்டியுள்ள கன்றின் தாய் மரத்தை பார்த்து வாங்கினால் நல்லது. சூரியஒளி படும்படி வைத்து கடினப்படுத்தப்பட்ட கன்றாக இருக்கிறதா என்றும் பார்க்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் கன்றுகளை வாங்கும் நாற்றுப் பண்ணை நம்பகமானதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
நடவு செய்து மூன்றாண்டுகள் கழித்துதான் மகசூல் கிடைக்கும். அப்போது, 'அட காய்ப்பில்லையே' என்று நஷ்டப்படுவதை விட, ஆரம்பத்திலேயே தெளிவாக விசாரித்து வாங்குவது நல்லது. பெரியகுளம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தரமான கன்றுகள் கிடைக்கின்றன. தொடர்புக்கு: 04546 - 231726

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...