Thursday, 29 September 2022

வாழைத் தோட்டத்து அய்யன்

 வாழைத் தோட்டத்து அய்யன்



கருமத்தம்பட்டி வாழைத் தோட்டத்து அய்யன் கோவை மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறார். இப்பகுதியில் குடியானவராக அவதரித்த அய்யனின் இயற்பெயர் சின்னையன், அவரது தோட்டம் வாழைத் தோட்டம். இவர் செங்காளியப்ப கவுண்டரின் மகனாக 1777ல் அவதரித்தார். 12 வயது வரை கல்வி பயின்றார். பின் இவரது தந்தை விருப்பப்படி மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார்.

மாடு மேய்க்கும் போது கற்களை சேர்த்து தெய்வ உருவமாக்கி வழிபடுவார். ஒருநாள் ஒரு பெரியவர் இவரது வேண்டுகோளை ஏற்று சர்வவிஷ சம்ஹார மந்திரத்தையும், பஞ்சாட்சர மந்திரத்தையும் உபதேசித்து அருளினார். அத்துடன் சின்னையனின் வீட்டில் ஒரு அறையில் இதே பெரியவர் சிவபெருமான்-உமாதேவியருடன் வீற்றிருக்கும் கோலத்தை காட்டி மறைந்து விட்டார். பின்னர் சின்னையன் தன்னை நாடி வந்தவர்களின் தீராப்பிணியையும், பாம்பு மற்றும் தேள் போன்ற கொடிய நச்சுப்பிராணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபூதியாலும், பஞ்சாட்சர மந்திரத்தாலும் குணப்படுத்தி வந்தார். ஆனால் எவரிடமுமம் கூலி எதிர்பார்க்கவில்லை.

ஒரு முறை அப்பகுதி அதிகாரி மனைவியின் வெண்குஷ்ட நோயை திருநீற்றால் குணப்படுத்தியதற்கு ஆயிரம் வெண் பொற்காசுகளை தாசில்தார் கொடுத்தார். ஆனால், சின்னையன் ஏற்காமல் அந்த பணத்தை ஆண்டவனுக்கே செலவழிக்க கூறிவிட்டார்.அவர் ஒவ்வொரு ஆண்டும் திருப்பேரூர் சென்று நடராஜரை தரிசிப்பது வழக்கம். தன் 72வது வயதில் திருவாதிரைக்கு முதல் நாள் அவரது மக்கள் அவரை திருப்பேரூருக்கு அழைத்தனர். ஆனால் அவர் "நான் நாளை கயிலாச நாதரை தரிசிக்கச் செல்கிறேன்'', என்று கூறிவிட்டார்.

மறுநாள் தான் அன்புடன் வளர்த்த காளைமாட்டை தேடிக் கொண்டு தோட்டத்திற்கு வந்தார். அந்த மாடு அவரது படுக்கையில் தான் படுக்கும். இருந்தும் திடீரென அந்த மாடு பாய்ந்து அவரை கொம்புகளால் குத்தி தூக்கி எறிந்தது. சின்னையன் இறைவன் திருவடி சேர்ந்தார். இந்த சம்பவம் நடந்து 155 ஆண்டுகள் ஆகிறது.அவர் மறைந்த பின், அவர் தனது பண்ணையாளின் கனவில் தோன்றி தாம் பூஜித்த லிங்கம், நந்தி இவைகள் மறைந்திருக்கும் இடத்தை சொன்னார். இவர் கூறியதைப்போல் லிங்கம், நந்தியை எடுத்து வந்து அவர் முக்தி அடைந்த கிளுவை மரத்தின் கீழ் வழிபாடு செய்து வந்தனர். அந்த லிங்கத்தின் அருகே ஒரு பாம்பு புற்றும் வளர்ந்தது. அந்த புற்று மண்ணே ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நஞ்சை தீர்க்கும் அரு மருந்தாக பயன்பட்டு வருகிறது.

இங்கு கிடைக்கும் புற்று மண்ணில் மிகச் சிறிதளவை உங்கள் வயல் அல்லது தோட்டத்து மண்ணில் கலந்து விட்டால், பாம்புத் தொல்லை, விஷ ஜந்துக்களின் தொல்லை இருக்காது. பாம்பு கடித்தவர்களுக்கு புற்று மண் பூசப் பட்டு விஷம் நீங்கப்பெறுவதாக நம்பிக்கை. வீடுகளில் பூச்சித்தொல்லை இருந்தால் புற்று மண்ணை நீரில் கலந்து வீட்டை சுற்றலும் தெளித்தால் விஷப்பூச்சிகள் அண்டாது என்பது நம்பிக்கை. புற்று மண் எவ்வளவு எடுத்தாலும் குறையாது என்பது இறைவனின் திருச்செயலாகும். நீங்கள் விவசாயியாக இருந்தால், அடிக்கடி வயலிலும், தோட்டத்திலும் பாம்புகளை பார்க்கக் கூடும். பாம்பு பற்றிய பயத்தை தவிர்க்கவும், அவற்றால் தீங்கு ஏற்படாமல் இருக்கவும் இத்தலம் வந்து தங்கி வாழைத் தோட்டத்து அய்யனை வழிபட்டுச் செல்லலாம்.

திருவிழா: மார்கழி திருவாதிரை
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி: அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில் கருத்தம்பட்டி - கோயம்புத்தூர் மாவட்டம்.

தாராபுரம் காடு ஹனுமந்தராய சுவாமி

 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைந்துள்ள காடு ஹனுமந்தராய சுவாமி கோவிலின் அரிய தகவல்கள் 

அனுமன் தரிசனம் - ஆங்கிலேய கலெக்டரின் நோய் தீர்த்த அனுமன்!

           இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, அப்போதைய கோவையின் கலெக்டராக இருந்த டீலன், ராஜபிளவை என்னும் கொடிய நோய்க்கு ஆளானார். வலியும் வேதனையும் தாங்கமுடியாமல் தவித்தவர், மற்றவர்கள் சொல்லியதன்பேரில் ஓர் அனுமன் கோயிலுக்குத் தொடர்ந்து சென்று வழிபட்டுவர, ராஜபிளவை நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமடைந்தார். தனக்கு அருளிய ஆஞ்சநேயருக்குக் காணிக்கையாகக் கோயில் கர்ப்பகிரகத்தைக் கட்டிக்கொடுக்க முன்வந்தார். கோயில் கோபுரம் கட்ட முயற்சி செய்தபோது, பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், `கோபுரம் கட்ட வேண்டாம்' என்று கூறிவிட்டார். அதன் காரணமாகவே இன்றைக்கும் அந்தக் கோயில் கோபுரம் இல்லாமல்தான் இருக்கிறது.

கலெக்டரின் நோய் தீர்த்த ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீகாடு ஹனுமந்தராய சுவாமி ஆலயம் என்ற பெயரில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

ஆஞ்சநேயரிடம் ஆழ்ந்த பக்திகொண்டிருந்த ஸ்ரீவியாசராயர், தேசத்தின் பல்வேறு பகுதிகளில் 732 ஆஞ்சநேய மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்துள்ளார். அவற்றுள் 89-வது மூர்த்திதான் ஸ்ரீகாடு ஸ்ரீஹனுமந்தராய சுவாமி.

கருவறையில் ஸ்ரீஹனுமந்தராய சுவாமியின் திருவடிகள் வடக்கு நோக்கி இருக்க, தன் திருமுகத்தைச் சற்றே கிழக்கு நோக்கித் திருப்பியவண்ணம் காட்சி தருகிறார் ஸ்ரீஹனுமந்தராய சுவாமி. இடுப்பில் சலங்கை மணிகளும் கழுத்தில் சுதர்சன சாளகிராம மாலைகளும் அலங்கரிக்க, வலக்கையில் அபய ஹஸ்தம் காட்டி, இடக்கையில் சௌகந்திகா மலரை ஏந்தியபடி அருள்கிறார்.

திருமண வரம், குழந்தை வரம் வேண்டுவோரும், தீராத நோய்கள் தீரவும் எண்ணற்ற பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து ஹனுமந்தராய சுவாமியை தரிசித்து வருகின்றனர். ஆஞ்சநேயர் கோயில்களுக்கே உரிய வடை மாலை, வெற்றிலை மாலை பிரார்த்தனைகள் இந்தக் கோயிலில் வழக்கத்தில் இல்லை. ஆண்டுதோறும் அனுமன் ஜயந்தி விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று ஹனுமந்தராய சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறுகின்றன. இங்குள்ள கொடி மரத்தில் துணியைக் கட்டி வேண்டிக் கொண்டால், வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.


Courtesy TirupurTalks

Tuesday, 27 September 2022

தாராபுரம் 1000 ஆண்டு பழமையான நடுகல்

 தாராபுரம் அருகே உள்ள சின்னப்புத்தூர் கிராமத்தில் - 1000 ஆண்டு பழமையான நடுகல் கண்டெடுப்பு !!

திருப்பூர் - பெருங்கற்காலம்(கி.மு.600) முதல் கொங்கு மண்டல மக்கள் கால்நடை வளர்ப்புடன், வேளாண்மை மற்றும் அரிய கற்களை கொண்டு மணிகள் செய்தல், இரும்பு கருவிகள் செய்தல், சங்கு வளையல்கள் மற்றும் மட்பாண்டங்கள் செய்தல் முதலிய தொழில்களையும் மேற்கொண்டனர் என்பதை வரலாற்றுச் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. ஓர் இடத்தில் அதிகமாக உற்பத்தியாகும் பொருட்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக பண்டைய காலத்தில் பல பெருவழிகள் உருவாகி இருந்தன. இந்த பெருவழிகளில் பயணம் செய்யும் வணிகர்களும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்த வேளாண் பெருங்குடி மக்களும் தங்கள் பாதுகாப்புக்காக வீரர்களை நியமித்து இருந்தனர். அவ்வாறு பாதுகாப்புக்கு இருந்த வீரர்கள் போரில் ஈடுபட்டு இறந்தால் அந்த மாவீரர் நினைவாக நடுகற்கள்


எடுத்து வழிபடும் மரபு பண்டைய தமிழகத்தில் வழக்கத்தில் இருந்துள்ளது. 

இந்த நிலையில் திருப்பூரில் இயங்கிவரும் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார் மற்றும் க.பொன்னுச்சாமி ஆகியோர் தாராபுரம் அருகே உள்ள சின்னப்புத்தூர் கிராமத்தில் ஆய்வுமேற்கொண்டபோது ஒரு ஆலமரத்தின் கீழ் 1000 ஆண்டுகள் பழைமையான நடுகல் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இது குறித்து ரவிக்குமார் கூறியதாவது:-

 இந்த நடுகல் 50 செ.மீ.உயரமும், 40 செ.மீ. அகலமும், 30 செ.மீ. கனமும் கொண்டது. இதில் இரண்டு மாவீரர்களின் உருவம் அழகோவியமாக செதுக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள முதல் மாவீரன் தனது இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் வைத்துள்ளான். 2-வது மாவீரன் தன் வலது கையில் ஈட்டியும், இடது கையில் கேடயமும் வைத்து சற்றே சாய்ந்தவாறு உள்ளார். இரு வீரர்களின் அள்ளி முடித்த குடுமியும் மேல்நோக்கி உள்ளன. தோள் வரை தொங்கும் காதுகளில் குண்டலம் அணிந்துள்ளனர். கழுத்தில் கண்டிகை, சரப்பள்ளி போன்ற அணிகலன்களும், கைகளில் தோள்வளை மற்றும் வீரத்துக்கு அடையாளமாக வீரக்காப்பும் அணிந்துள்ளனர். இடையில் மட்டும் மடிந்த மிகவும் நேர்த்தியான ஆடை அணிந்துள்ள மாவீரர்கள் தங்கள் கால்களில் வீரக்கழலும் அடைந்துள்ளனர்.

    எழுத்து பொறிப்பு இல்லாத இந்த நடுகல்லின் சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும் போது இது 1000 ஆண்டுகள் பழமையானது ஆகும். மேலும் இங்கு உடைந்த நிலையில் காணப்படும் கருப்பு-சிவப்பு பானை ஓடுகள் மற்றும் இரும்பு கசடுகள் மூலம் சின்னப்புத்தூர் கிராம மக்கள் ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகளாகக் கால்நடை வளர்ப்பு, வேளாண்மையுடன் வணிகமும் செய்து வருவதை நாம் அறிய முடிகிறது.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...