Sunday, 12 February 2023

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻




திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் திகழ்கிறது. 


குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள மலை மற்றும் குன்றுகளில் முருகப்பெருமான் கோவில்கள் நிறைந்து காணப்படுகின்றன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் திகழ்கிறது.


அலகுமலை கோவில் தல வரலாற்றை அறிய வரலாற்று சான்றுகளும் இலக்கிய சான்றுகளும் உள்ளன. திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டு ஒன்று கைலாசநாதர் கோவில் முன்பாக உள்ளது. அக்கல்வெட்டு கி.பி.1641–ம் ஆண்டு எழுதப்பட்டது.


பெயர் காரணம் :


அலகு என்றால் ‘மூக்கு’ என்பது பொருள். மூக்கின் வடிவம் போல் இந்த மலை அமைந்து உள்ளதால் ‘அலகு மலை’ என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அலகு மலைக்கு கீழே அழகாபுரி அம்மன் என்ற ஊர்க்காவல் தெய்வம் ஒன்று இருப்பதால் இந்த மலைக்கு அலகுமலை என்ற பெயர் வந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். மலை மீது முருகப்பெருமான் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


மலை அடிவாரத்தில் மயில் வாகன மண்டபம் உள்ளது. இதையடுத்து படியேறி எட்டு தூண்கள் கொண்ட மண்டபத்தை கடந்தால், இடதுபுறத்தில் பாதவிநாயகரை தரிசிக்கலாம். அலகுமலை படிகளின் ஆரம்பத்தில் பாத விநாயகர் கோவில் உள்ளது. விநாயகரை வழிபட்டு விட்டு, வடக்கு நோக்கி அமைந்துள்ள படிகளை கடந்தால் இடது புறம் இடும்பன் சன்னிதி அமைந்துள்ளது.


ஆறுபடை வீடுகள் :


இடும்பன் சன்னிதியைக் கடந்து மலையின் மேற்காக உள்ள 300 படிகளை கடந்து மேலே சென்றால் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்யலாம். இந்த ஆறுபடை வீடுகள் கோவில் 1984–ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் உள்ளாரோ, அதே போன்று இந்த சன்னிதிகளிலும் காட்சி தருவது சிறப்பம்சமாகும். அத்துடன் சண்முகருக்கு ஒரு சன்னிதி அமைந்துள்ளது. மலை பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும் மேலே ஏழாவது படைவீடாக அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும். ஆறுபடை வீடு சன்னிதிகளின் அருகில் நவக்கிரக சன்னிதி உள்ளது.


இடும்பன் சன்னிதி அருகில் குழந்தை குமார் கோவில் உள்ளது. இங்கு அலகுமலை குமரன், பாலகனாக காட்சி அளிக்கின்றார். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு, அதை நிறைவேற்றும் தெய்வமாக இந்த பாலமுருகன் திகழ்கிறார். பழனி மலையில் இருப்பது போல் ஆண்டி கோலத்தில், சிறிது குஞ்சம் போன்று முடியுடன் வலது கையில் தண்டாயுதத்தை தாங்கியபடி இறைவன் காட்சி தருகிறார்.


முருகனின் சமயோசிதம் :


அலகுமலை கோவில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. கிழக்கில் தாழ்ந்தும் மேற்கில் உயர்ந்தும் காணப்படுகிறது. கோவில் கருவறையில் முத்துகுமாரசாமி பாலதண்டாயுதபாணியாக, முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


ஒரு முறை திருகயிலாயத்தில் பாலகனான முருகப்பெருமான் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பார்வதிதேவியும், கங்காதேவியும் தன் அருகில் வருமாறு அழைத்தனர். ஆனால் முருகப்பெருமான், அவர்கள் அருகில் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான், முருகனின் அருகில் சென்று, ‘இங்கே உள்ள இரண்டு தாய்மார்களில் உனக்கு கங்காதேவியை பிடிக்குமா? பார்வதிதேவியை பிடிக்குமா?’ என்று கேள்வி எழுப்பினார்.


அதற்கு முருகப்பெருமான், ‘அறன் மாதாவின் மீதுதான் எனக்கு மிகுந்த ஆசை’ என்று கூறினார்.


இவ்விடத்தில் முருகப்பெருமான் கூறிய பதில் சமயோசிதமானது. அதாவது ‘அறன்மாதா’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ‘அறம் வளர்த்த நாயகி’ என்பது ஒரு பொருள். அறம் வளர்த்த நாயகி என்றால் பார்வதி தேவியை குறிக்கும். மேலும் ‘உயிர்களை காக்கும் நீர்’ என்ற பொருளும் உண்டு. இது கங்காதேவியை குறிப்பதாகும். இவ்வாறு முருகப்பெருமான் ஒரு வார்த்தையில் இரண்டு அன்னையரையும் பிடிக்கும் என்று கூறினார்.


இத்தகைய சிறப்புகளையுடைய பாலதண்டாயுதபாணியை காண கோவிலுக்குள் நுழையும் முதலிலே இருப்பது கொடிமரம். கொடிமரத்திற்கு மேற்கு நோக்கி மயில் வாகனமும் அதற்கு அருகில் பலிபீடமும் உள்ளது. தல விருட்சமாக வில்வ மரம் கோவிலின் இடது புறத்தில் அமைந்துள்ளது.


கோவில் மகா மண்டபத்தின் உள்ளே வலது புறத்தில் கடந்த 18 ஆண்டுகளாக சிறப்பு சங்கடஹர சதுர்த்தி விழாக்காணும் ஆனந்த விநாயகரும், வலம்புரி விநாயகரும் அருள்பாலிக் கிறார்கள். இடது புற மேடையில் வீரபாகு தேவரும், தெற்கு நோக்கிய தனி சன்னிதியில் தேவியர் வள்ளி, தெய்வானையும் அருள்பாலிக்கிறார்கள். கர்ப்பக்கிரகத்தில் முருகன் ஆண்டி கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை கோவில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.


கவலை தீர்க்கும் கந்தன் :

நடுவில் கர்ப்பக்கிரகம் உள்ளது. இதில் முருகவேள் ‘முத்துகுமார பால் தண்டாயுதபாணி’ எனும் பெயர் தாங்கி கண்களை சற்று தாழ்த்திய நிலையில் கையில் தண்டாயுதத்துடன் ஞான குருவாக காட்சி தருகிறார். ஞான குருவான அவரை நெஞ்சாரப்பணிவோரின் குறைகள், கவலைகள், பிரச்சினைகள் தீர்வது இன்றும் நடக்கும் நிகழ்வாகும். சுமார் 4 அரை அடி உயர திருவுருவில் காட்சி அளிக்கும் முருகப்பெருமானை, வெள்ளிக் கவசத்தில் காணும்போதும் கண்கள் இமைகளை மூட மறுக்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலை காண சுமார் 300 படிகளில் ஏறி செல்ல வேண்டும். வாகனங்கள் கோவில் வரை செல்ல சாலை வசதியும் உள்ளது.


நடை திறந்திருக்கும் நேரம்: 


காலை 6:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.


அமைவிடம் :


திருப்பூருக்கு தென்கிழக்கில் தாராபுரம் சாலையில் 22 கிலோமீட்டர் தூரத்தில் அலகுமலை கிராமம் அமைந்துள்ளது. 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கிராமத்தில், அழகு பெற்று எழில் சூழ்ந்த அலகுமலை காணப்படுகிறது. சூரியனுடன் சேர்த்து ஒன்பது கிரகங்கள், நவக்கிரகங்களாக உள்ளன. அது போன்று இந்த மலையை சுற்றிலும் ஏழு மலைகள் உள்ளன. அவை சென்னிமலை, சிவன் மலை, வட்டமலை, ஊதியூர் மலை, பழனிமலை, மருதமலை, கதித்தமலை ஆகியனவாகும். இந்த ஏழு மலைகளுக்கு நடுவில் அலகுமலை காட்சியளிக்கிறது. இதுவும் அலகுமலையின் தனிச் சிறப்பு ஆகும். 


#From ; TirupurTalks

சென்னிமலை முருகன் கோவில்

 *"39 ஆண்டுகளுக்கு முன் ..சென்னிமலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு*

*"இதே பிப்ரவரி 12 (1984) அன்று நம் சென்னிமலையில் நிகழ்ந்த அற்புதம்*"




லட்சக்கணக்கான மக்கள் கண்டு களிக்க, இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட வண்டி நம் சென்னிமலையின் 

1320படிக்கட்டுக்கள் வழியாக மலை, உச்சியை அடைந்த அதிசயம்! 

 

· 12.2.84 . கிழக்கே வெளுத்தது. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் மக்கள் மலை அடிவாரத்தில் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரையில் படிக்கட்டுக்களின் இரு பக்கங்களில், அதிகாலையிலிருந்தே நின்றும், அமர்ந்தும், மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டும் தங்களுக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள ஆயத்தமாயினர்.


· 12.2.84 அன்று காலை சரியாக 7:30 மணி. அலங்காரம் செய்யப்ட்ட இரட்டை மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட இரண்டு காளை மாடுகளும் கம்பீரமாக தயாராக இருக்க, அப்பொழுதுதான் வண்டியை யார் ஓட்டுவார் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டபடி பச்சை வேட்டி மஞ்சள் துண்டு அணிந்து, வண்டியை ஓட்ட, வண்டியில் அமர்ந்தவர் 60 வயதான பெருந்துறை சிவன்மலைக் கவுண்டர்.


· சிவன்மலைக் கவுண்டர் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், காளைமாடுகள் இரண்டும் கம்பீரமாகப் படிக்கட்டுக்களில் ஏற ஆரம்பித்து விட்டன.


· காளை மாடுகள் ஒவ்வொரு படியை மிதித்து மேலேறும்போது மலையே “அரகரா” என்று முழக்கமிட்டதைப் போல, அடிவாரம் முதல் மலை உச்சி வரை இருந்த பக்தர்களின் அரகர முழக்கங்கள் அதிர்ந்து எதிரொலித்தன.


· லட்சக் கணக்கான மக்கள் சுற்றிலும் இருந்து அரகரா முழக்கங்களை எழுப்பியபோதும் வண்டியில் பூட்டப்பட்ட மாடுகள் இரண்டும் மக்கள் கூட்டத்தைக்க் கண்டும், கோஷங்களைக் கேட்டும் சிறிதும் மிரளவில்லை. இராணுவ வீரர்களைப் போல் ஒருவிதமான மிடுக்கோடு மலைப்படிகளில் ஏறின ! சரியாக நாற்பத்தாறு நிமிடங்களில் ஆயிரத்து முன்னூற்று இருபது படிகளையும் கடந்து, மலையுச்சியிலுள்ள முருகன் சந்நிதியில் போய் நின்றன.


· மலையுச்சியை வண்டி மாடுகள் அடைந்ததும் லட்சக்கணக்கான மக்களின் அரகரா முழக்கமும் உச்சத்தைத்தொட,வண்டி மாடுகளுடன் சிவன்மலைக் கவுண்டருக்கும் வண்டி மாடுகளுக்கும் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.


· பிரகார வழிபாட்டுக்குபின் சிவன்மலைக்கவுண்டர் வண்டியின் மீது ஏறி நின்று, நிகழ்வுக்கு வண்டி, மாடுகள், சாட்டை மற்றும் உபகருவிகளை வழங்கிய அனைவருக்கும் ஏனையோருக்கும் நன்றி தெரிவித்தார்.   

 

· முன்னதாக சில வாரங்களுக்கு முன்னரே, சென்னிமலை வேலவரே கனவில் வந்து ஆணையிட்டதாகக் கூறி, வண்டி, காளைமாடுகள், சாட்டை மற்றும் வண்டி ஓட்டத் தேவையான உபகரணங்களை பல்வேறு ஊர்களைச் சேர்ந்த குறிப்பிட்ட பக்தர்கள் வேட்டுவபாளையம் வேளாளத்தம்பிரான் மடத்தைச் சேர்ந்த சின்னப் பூசாரியார் பொன்னுச்சாமி வசம் காணிக்கையாக அளித்தனர்.


· இரண்டு காளை மாடுகளை இந்த நிகழ்வுக்குக் காணிக்கையாக கொடுத்தவர் சென்னிமலையை அடுத்த முத்தூரைச் சேர்ந்த துரைசாமிக் கவுண்டர். காளை மாடுகளைப் பூட்டிச் செல்லும் இரட்டை மாட்டு வண்டியை காணிக்கையாகக் கொடுத்தவர் அந்தியூர் அருகே விராலிக்காட்டூர் கோபால் கவுண்டர்.


· கனவில் தோன்றிய இறை ஆணையைக் குறிப்பிட்டு, 12.2.84 அன்று காலை சென்னிமலை முருகன் கோவில் படிக்கட்டுக்களில் இரட்டைமாட்டு வண்டி செல்ல வேண்டும் என்பதற்காக, முன்னதாகவே பெரியார் மாவட்ட அன்றைய ஆட்சித்தலைவர் ராஜாராம் அவர்களிடம் அனுமதி கேட்கப்பட்டது. இம்மாதிரி மாதிரியான நிகழ்வுக்கு, முன்மாதிரி நிகழ்வுகள் நடைபெற்றிராத சூழ்நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வண்டியை இழுத்துக் கொண்டு மாடுகள் மலைப் படிக்கட்டுக்களில் ஏறிச்செல்லும்போது, கூட்டத்தைக் கண்டு, காளை மாடுகள் மிரண்டு போய், தாறுமாறாக ஓட ஆரம்பித்து விட்டால், அசம்பாவித நிகழ்வுகள் நடக்கக்கூடாது, மற்றும் மக்களின் பாதுகாப்புக்காரணங்களுக்காக முதலில் அவர் அனுமதி மறுத்திருக்கிறார். “முருகன் அருளால் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காது” என்று பலரும் எடுத்துக்கூறிய போதும் கலெக்டர் அவர்கள் சென்னிமலைக்கு நேரில் வந்து, மலை உச்சிவரை படிக்கட்டுக்களில் ஏறிச் சென்று பார்வையிட்டிருக்கிறார். பிறகு அரைமனதோடுதான் நிகழ்ச்சிக்கு அனுமதியளித்திருக்கிறார் என்று பலரும் அந்நாளில் கூறுவதுண்டு..   




· முந்தைய நாளான 11.2.1984 அன்று பிற்பகல் சின்ன வேட்டுவபாளையத்திலிருந்து சென்னிமலைக்கு விட்டுப் புறப்பட்ட வண்டிக்கு வழி நெடுக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு சென்னிமலை அருள்மிகு கைலாசநாதர் கோவிலிலும் 12.2.84 அதிகாலை மலை அடிவாரத்திலும் சிறப்புப் பூசைகள் நடைபெற்றன.


· 1320 படிகளிலும் கம்பீரமாக ஏறிச் சென்ற காளை மாடுகள் பூட்டிய வண்டியைப் பின்தொடர்ந்து சென்ற அதிமுக்கியப்பிரமுகர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ராஜாராமன், துணை ஆட்சியர் சந்திரபிரகாஷ், காவல்துறை கண்காணிப்பாளார் திரு அப்பாத்துரை ஆகியோர் அன்றைய மாலை வெளிவந்த கோவைப் பதிப்பான “மாலை முரசு” “சென்னிமலையில் இன்று நடந்த அதிசய நிகழ்ச்சி ..ஆறு லட்சம் பேர் பக்தர்கள் திரண்டு பார்த்தனர்” என்று முதல் பக்கக் கொட்டை எழுத்துத் தலைப்புச் செய்தியாக, சென்னிமலையில் மாட்டு வண்டி மலையேறிய செய்தியை வெளியிட்டது. இவ்வபூர்வ நிகழ்ச்சியை “ஹிந்து” ”இந்தியன் எக்ஸ்பிரஸ்” முதலிய ஆங்கிலத் தினசரிகளும், “தினமணி” ”தினத்தந்தி” “மாலைமுரசு” முதலிய தமிழ்தினசரிகளும், “இதயம் பேசுகிறது” ”தேவி” முதலிய தமிழ் வார இதழ்களும் சிறப்புச்செய்திகளாக வெளியிட்டன.

· பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா தேசிய செய்தி நிறுவனமும் இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி வெளியிட்டதனால், தேசிய அளவிலும் சென்னிமலையில் “இரட்டைமாட்டு வண்டி மலைப்படிக்கட்டுகளில் ஏறிச் சென்ற நிகழ்ச்சி முக்கியத்துவம் பெற்றது !   

· 12.2.84 அன்று காலையிலேயே இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட வண்டி மலையேறப் போகிறது என்பதால் 11.2.84 அன்று இரவிலிருந்தே பல ஊர்களில் இருந்து மக்கள் கூட்டம் சென்னிமலையை நோக்கி பயணித்தது. ஈரோடு காங்கயம் பெருந்துறையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயங்கின. மக்களை சென்னிமலைக்கு கொண்டுவந்து சேர்த்தன !

· சென்னிமலைக்கு வரும் எல்லா வழித்தடங்களிலும் பேருந்துகள் வாகனங்கள் சென்னிமலைக்குச் சில கிலோ மீட்டர் தூரத்திலேயே நிறுத்தப்பட்டன. மக்கள் பாதசாரியாக எல்லாத் திசைகளில் இருந்தும் மலை அடிவாரத்துக்கும் மலைக்கும் குவிந்தனர். பல லட்சம் பேர் கலந்து கொண்ட அந்த நிகழ்சசிக்கு ஈரோடு மாவட்டம் காவல்துறை மற்றும் சென்னிமலை காவல்துறை அதிகாரிகளும் காவலர்களும் மிகச் சிறப்பான, பாராட்டுக்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

· பரப்பளவில் சிற்றூராக உள்ள நம் சென்னிமலையில், “மலையா -மக்கள் தலையா” என்று அதிசயக்கும் வண்ணம் ஒரே சமயத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து பல லட்சம் மக்கள் திரளாகக் கலந்து கொண்டபோதும், எந்தவித அசம்பாவித நிகழ்வுகளும் இல்லாமல், 1320 மலைப் படிக்கட்டுக்கள் இரட்டை மாட்டு வண்டி ஏறிச் சென்ற அதிஅற்புத - அதிசய நிகழ்ச்சியை. நம் சென்னிமலைக்கு கூடுதல் பெருமை சேர்த்த நிகழ்ச்சியை, 36 ஆண்டுகள் கழித்து, நிகழ்வு நடைபெற்ற அதே தேதியான இன்று 12.2.2023இல் “மலரும் நினைவுகளாக ” மீண்டும் நினைவு கூர்வதில் / பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி.


From ; FB சென்னிமலை ஆண்டவர்

Thursday, 29 September 2022

வாழைத் தோட்டத்து அய்யன்

 வாழைத் தோட்டத்து அய்யன்



கருமத்தம்பட்டி வாழைத் தோட்டத்து அய்யன் கோவை மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறார். இப்பகுதியில் குடியானவராக அவதரித்த அய்யனின் இயற்பெயர் சின்னையன், அவரது தோட்டம் வாழைத் தோட்டம். இவர் செங்காளியப்ப கவுண்டரின் மகனாக 1777ல் அவதரித்தார். 12 வயது வரை கல்வி பயின்றார். பின் இவரது தந்தை விருப்பப்படி மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார்.

மாடு மேய்க்கும் போது கற்களை சேர்த்து தெய்வ உருவமாக்கி வழிபடுவார். ஒருநாள் ஒரு பெரியவர் இவரது வேண்டுகோளை ஏற்று சர்வவிஷ சம்ஹார மந்திரத்தையும், பஞ்சாட்சர மந்திரத்தையும் உபதேசித்து அருளினார். அத்துடன் சின்னையனின் வீட்டில் ஒரு அறையில் இதே பெரியவர் சிவபெருமான்-உமாதேவியருடன் வீற்றிருக்கும் கோலத்தை காட்டி மறைந்து விட்டார். பின்னர் சின்னையன் தன்னை நாடி வந்தவர்களின் தீராப்பிணியையும், பாம்பு மற்றும் தேள் போன்ற கொடிய நச்சுப்பிராணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபூதியாலும், பஞ்சாட்சர மந்திரத்தாலும் குணப்படுத்தி வந்தார். ஆனால் எவரிடமுமம் கூலி எதிர்பார்க்கவில்லை.

ஒரு முறை அப்பகுதி அதிகாரி மனைவியின் வெண்குஷ்ட நோயை திருநீற்றால் குணப்படுத்தியதற்கு ஆயிரம் வெண் பொற்காசுகளை தாசில்தார் கொடுத்தார். ஆனால், சின்னையன் ஏற்காமல் அந்த பணத்தை ஆண்டவனுக்கே செலவழிக்க கூறிவிட்டார்.அவர் ஒவ்வொரு ஆண்டும் திருப்பேரூர் சென்று நடராஜரை தரிசிப்பது வழக்கம். தன் 72வது வயதில் திருவாதிரைக்கு முதல் நாள் அவரது மக்கள் அவரை திருப்பேரூருக்கு அழைத்தனர். ஆனால் அவர் "நான் நாளை கயிலாச நாதரை தரிசிக்கச் செல்கிறேன்'', என்று கூறிவிட்டார்.

மறுநாள் தான் அன்புடன் வளர்த்த காளைமாட்டை தேடிக் கொண்டு தோட்டத்திற்கு வந்தார். அந்த மாடு அவரது படுக்கையில் தான் படுக்கும். இருந்தும் திடீரென அந்த மாடு பாய்ந்து அவரை கொம்புகளால் குத்தி தூக்கி எறிந்தது. சின்னையன் இறைவன் திருவடி சேர்ந்தார். இந்த சம்பவம் நடந்து 155 ஆண்டுகள் ஆகிறது.அவர் மறைந்த பின், அவர் தனது பண்ணையாளின் கனவில் தோன்றி தாம் பூஜித்த லிங்கம், நந்தி இவைகள் மறைந்திருக்கும் இடத்தை சொன்னார். இவர் கூறியதைப்போல் லிங்கம், நந்தியை எடுத்து வந்து அவர் முக்தி அடைந்த கிளுவை மரத்தின் கீழ் வழிபாடு செய்து வந்தனர். அந்த லிங்கத்தின் அருகே ஒரு பாம்பு புற்றும் வளர்ந்தது. அந்த புற்று மண்ணே ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நஞ்சை தீர்க்கும் அரு மருந்தாக பயன்பட்டு வருகிறது.

இங்கு கிடைக்கும் புற்று மண்ணில் மிகச் சிறிதளவை உங்கள் வயல் அல்லது தோட்டத்து மண்ணில் கலந்து விட்டால், பாம்புத் தொல்லை, விஷ ஜந்துக்களின் தொல்லை இருக்காது. பாம்பு கடித்தவர்களுக்கு புற்று மண் பூசப் பட்டு விஷம் நீங்கப்பெறுவதாக நம்பிக்கை. வீடுகளில் பூச்சித்தொல்லை இருந்தால் புற்று மண்ணை நீரில் கலந்து வீட்டை சுற்றலும் தெளித்தால் விஷப்பூச்சிகள் அண்டாது என்பது நம்பிக்கை. புற்று மண் எவ்வளவு எடுத்தாலும் குறையாது என்பது இறைவனின் திருச்செயலாகும். நீங்கள் விவசாயியாக இருந்தால், அடிக்கடி வயலிலும், தோட்டத்திலும் பாம்புகளை பார்க்கக் கூடும். பாம்பு பற்றிய பயத்தை தவிர்க்கவும், அவற்றால் தீங்கு ஏற்படாமல் இருக்கவும் இத்தலம் வந்து தங்கி வாழைத் தோட்டத்து அய்யனை வழிபட்டுச் செல்லலாம்.

திருவிழா: மார்கழி திருவாதிரை
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி: அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில் கருத்தம்பட்டி - கோயம்புத்தூர் மாவட்டம்.

தாராபுரம் காடு ஹனுமந்தராய சுவாமி

 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைந்துள்ள காடு ஹனுமந்தராய சுவாமி கோவிலின் அரிய தகவல்கள் 

அனுமன் தரிசனம் - ஆங்கிலேய கலெக்டரின் நோய் தீர்த்த அனுமன்!

           இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, அப்போதைய கோவையின் கலெக்டராக இருந்த டீலன், ராஜபிளவை என்னும் கொடிய நோய்க்கு ஆளானார். வலியும் வேதனையும் தாங்கமுடியாமல் தவித்தவர், மற்றவர்கள் சொல்லியதன்பேரில் ஓர் அனுமன் கோயிலுக்குத் தொடர்ந்து சென்று வழிபட்டுவர, ராஜபிளவை நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமடைந்தார். தனக்கு அருளிய ஆஞ்சநேயருக்குக் காணிக்கையாகக் கோயில் கர்ப்பகிரகத்தைக் கட்டிக்கொடுக்க முன்வந்தார். கோயில் கோபுரம் கட்ட முயற்சி செய்தபோது, பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், `கோபுரம் கட்ட வேண்டாம்' என்று கூறிவிட்டார். அதன் காரணமாகவே இன்றைக்கும் அந்தக் கோயில் கோபுரம் இல்லாமல்தான் இருக்கிறது.

கலெக்டரின் நோய் தீர்த்த ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீகாடு ஹனுமந்தராய சுவாமி ஆலயம் என்ற பெயரில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

ஆஞ்சநேயரிடம் ஆழ்ந்த பக்திகொண்டிருந்த ஸ்ரீவியாசராயர், தேசத்தின் பல்வேறு பகுதிகளில் 732 ஆஞ்சநேய மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்துள்ளார். அவற்றுள் 89-வது மூர்த்திதான் ஸ்ரீகாடு ஸ்ரீஹனுமந்தராய சுவாமி.

கருவறையில் ஸ்ரீஹனுமந்தராய சுவாமியின் திருவடிகள் வடக்கு நோக்கி இருக்க, தன் திருமுகத்தைச் சற்றே கிழக்கு நோக்கித் திருப்பியவண்ணம் காட்சி தருகிறார் ஸ்ரீஹனுமந்தராய சுவாமி. இடுப்பில் சலங்கை மணிகளும் கழுத்தில் சுதர்சன சாளகிராம மாலைகளும் அலங்கரிக்க, வலக்கையில் அபய ஹஸ்தம் காட்டி, இடக்கையில் சௌகந்திகா மலரை ஏந்தியபடி அருள்கிறார்.

திருமண வரம், குழந்தை வரம் வேண்டுவோரும், தீராத நோய்கள் தீரவும் எண்ணற்ற பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து ஹனுமந்தராய சுவாமியை தரிசித்து வருகின்றனர். ஆஞ்சநேயர் கோயில்களுக்கே உரிய வடை மாலை, வெற்றிலை மாலை பிரார்த்தனைகள் இந்தக் கோயிலில் வழக்கத்தில் இல்லை. ஆண்டுதோறும் அனுமன் ஜயந்தி விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று ஹனுமந்தராய சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறுகின்றன. இங்குள்ள கொடி மரத்தில் துணியைக் கட்டி வேண்டிக் கொண்டால், வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.


Courtesy TirupurTalks

Tuesday, 27 September 2022

தாராபுரம் 1000 ஆண்டு பழமையான நடுகல்

 தாராபுரம் அருகே உள்ள சின்னப்புத்தூர் கிராமத்தில் - 1000 ஆண்டு பழமையான நடுகல் கண்டெடுப்பு !!

திருப்பூர் - பெருங்கற்காலம்(கி.மு.600) முதல் கொங்கு மண்டல மக்கள் கால்நடை வளர்ப்புடன், வேளாண்மை மற்றும் அரிய கற்களை கொண்டு மணிகள் செய்தல், இரும்பு கருவிகள் செய்தல், சங்கு வளையல்கள் மற்றும் மட்பாண்டங்கள் செய்தல் முதலிய தொழில்களையும் மேற்கொண்டனர் என்பதை வரலாற்றுச் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. ஓர் இடத்தில் அதிகமாக உற்பத்தியாகும் பொருட்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக பண்டைய காலத்தில் பல பெருவழிகள் உருவாகி இருந்தன. இந்த பெருவழிகளில் பயணம் செய்யும் வணிகர்களும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்த வேளாண் பெருங்குடி மக்களும் தங்கள் பாதுகாப்புக்காக வீரர்களை நியமித்து இருந்தனர். அவ்வாறு பாதுகாப்புக்கு இருந்த வீரர்கள் போரில் ஈடுபட்டு இறந்தால் அந்த மாவீரர் நினைவாக நடுகற்கள்


எடுத்து வழிபடும் மரபு பண்டைய தமிழகத்தில் வழக்கத்தில் இருந்துள்ளது. 

இந்த நிலையில் திருப்பூரில் இயங்கிவரும் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார் மற்றும் க.பொன்னுச்சாமி ஆகியோர் தாராபுரம் அருகே உள்ள சின்னப்புத்தூர் கிராமத்தில் ஆய்வுமேற்கொண்டபோது ஒரு ஆலமரத்தின் கீழ் 1000 ஆண்டுகள் பழைமையான நடுகல் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இது குறித்து ரவிக்குமார் கூறியதாவது:-

 இந்த நடுகல் 50 செ.மீ.உயரமும், 40 செ.மீ. அகலமும், 30 செ.மீ. கனமும் கொண்டது. இதில் இரண்டு மாவீரர்களின் உருவம் அழகோவியமாக செதுக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள முதல் மாவீரன் தனது இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் வைத்துள்ளான். 2-வது மாவீரன் தன் வலது கையில் ஈட்டியும், இடது கையில் கேடயமும் வைத்து சற்றே சாய்ந்தவாறு உள்ளார். இரு வீரர்களின் அள்ளி முடித்த குடுமியும் மேல்நோக்கி உள்ளன. தோள் வரை தொங்கும் காதுகளில் குண்டலம் அணிந்துள்ளனர். கழுத்தில் கண்டிகை, சரப்பள்ளி போன்ற அணிகலன்களும், கைகளில் தோள்வளை மற்றும் வீரத்துக்கு அடையாளமாக வீரக்காப்பும் அணிந்துள்ளனர். இடையில் மட்டும் மடிந்த மிகவும் நேர்த்தியான ஆடை அணிந்துள்ள மாவீரர்கள் தங்கள் கால்களில் வீரக்கழலும் அடைந்துள்ளனர்.

    எழுத்து பொறிப்பு இல்லாத இந்த நடுகல்லின் சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும் போது இது 1000 ஆண்டுகள் பழமையானது ஆகும். மேலும் இங்கு உடைந்த நிலையில் காணப்படும் கருப்பு-சிவப்பு பானை ஓடுகள் மற்றும் இரும்பு கசடுகள் மூலம் சின்னப்புத்தூர் கிராம மக்கள் ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகளாகக் கால்நடை வளர்ப்பு, வேளாண்மையுடன் வணிகமும் செய்து வருவதை நாம் அறிய முடிகிறது.

Tuesday, 17 May 2022

மெட்ராத்தி ஜமீன்

 கலையிழந்து வருகிறது மெட்ராத்தி ஜமீன்




ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான சேவர்களுடன் இயங்கி வந்த உடுமலை மெட்ராத்தி ஜமீன் இன்று பராமரிப்பதற்கு ஆள் இல்லாத நிலையில் கலையிழந்து வருகிறது.

1800 ம் ஆண்டுகளுக்குப் பிறகு 72 பாளையபட்டுகள் தமிழகத்தில் ஆட்சி செலுத்தி வந்தன. குறு நில மன்னர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் பாசன திட்டங்கள், பாதுகாப்பு, இரவு காவல் என மக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்து வந்தனர். இதற்காக வரி வசூலித்து அந்தந்த பகுதிகளில் ஆட்சி நடத்தி வந்தனர் இந்த பாளையக்காரர்கள். இவர்களில் பலர் ஆங்கிலேய அரசுக்கு கட்டுப்படாமல் இருந்து வந்தனர். ஆனால் ஒரு சில பாளையக்காரர்கள் கீழ்பணிந்து நடந்து கொண்டனர். இதில் தங்களுக்கு கட்டுப்பட்டு வரி செலுத்த ஒப்புக் கொண்ட பாளையக்காரர்களை மட்டும் அந்த பகுதி ஜமீனாக நியமித்தது ஆங்கிலேய அரசு. அந்த வகையில் உடுமலை வட்டத்தில் மெட்ராத்திரி பாளையபட்டு என்ற பகுதியை 1876 ம் ஆண்டு ராமசாமி நத்தம நாய்க்கர் என்பவரிடம் ஆங்கிலேயர்கள் ஒப்படைத்தனர். ராமேகவுண்டன்புதூர், மெட்ராத்தி, இச்சிப்பட்டி, பணத்தம்பட்டி, ராமலிங்காபுரம், உலகப்ப கவுண்டன்புதூர், தாசர்பட்டி, உரம்பூர் ஆகிய 8 கிராமங்கள் மெட்ராத்தி ஜமீனுக்கு கீழ் ஆட்சிக்கு வந்தன. இதன் ஆட்சி பீடம் ராமேயகவுண்டன்புதூர் கிராமத்தில் அமைந்தன. இந்த ஆட்சி பீடத்திற்காக அந்த கிராமத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான ஒரு அரண்மனை எழுப்பப்பட்டது. இதில் ஒரு திருமண மண்டபம், அடுக்களைப் பகுதி, தர்பார் மண்டபம், அந்தப்புரம், குதிரை லாயம், சிம்மாசனம் ஆகியவைகள் கட்டப்பட்டன. இந்த அரண்மனையில் வாழ்ந்த ராமசாமி நத்தம நாயக்கர் ஆட்சி செலுத்தி வந்தார். இவர் மறைவுக்குப் பிறகு நடராஜ நத்தம நாயக்கர் பதவியேற்றுக் கொண்டார்.. ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற நேரத்தில் இவர் மெட்ராத்திரி ஜமீனாக பொருப்பில் இருந்து வந்தார். அதன் பிறகு வரி வசூல் முறையில் ஜமீன்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டது. ஆனாலும் மெட்ராத்திரி ஜமீன் கட்டுப்பாட்டில் உள்ள 8 கிராமங்களிலும் நடராஜ நத்தம நாயக்கருக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கப்பட்டு வந்தது. 8 கிராமங்களில் எந்த திருமணமாக இருந்தாலும் அரண்மனைக்கு வந்து ஜமீனிடம் மணமக்கள் ஆசி பெற்றுச்செல்லும் நடைமுறை இருந்து வந்தது. ஜமீன் குடும்பத்தை பொருத்த மட்டில் இவர்களது கட்டுப்பாட்டில் இருந்து வந்த சுமார் 500 ஏக்கர்களில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் 2007 ல் நடராஜ நத்தம நாய்க்கர் மறைந்த நிலையில் தற்போது அரண்மனை யில் வசித்து வரும் திருமலைசாமி நத்தம நாயக்கருக்கு பட்டம் சூட்டப்பட்டது. இந்த காலத்திலும் அரச பரம்பரை போல் 8 கிராம மக்கள் கூடி அவர்கள் முன்னிலையில் இவருக்கு முடிசூட்டப்பட்டது. தங்க மிஞ்சி அணிவித்து, பட்டத்து கத்தியுடன் இவருக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. இன்று வரை இவர் இந்த பாளையபட்டின் ஜமீனாக இருந்தாலும் இன்றைய நவீன உலகில் ஜமீன் நிர்வாகத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் தற்போதும் இன்று வரை 8 கிராமங்களில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் நடை பெறும் விழாக்களாக இருந்தாலும், வேறு எந்த பொது விழாக்கள், குடும்ப விழாக்களாக இருந்தாலும் முதல் மரியாதை இவருக்குத் தான். மெட்ராத்தி கூட்டுறவு சங்கத்தில் மூன்று முறை தலைவர் பதவியில் இருந்துள்ள திருமலைசாமி நத்தம நாய்க்கர் தூய்மையான நிர்வாகத்தை நடத்தி வந்துள்ளார் என்பது மக்களின் ஏகோபித்த கருத்து விஜயகுமார் என்ற பெயரில் பொது மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் இந்த ஜமீன் திருமலைசாமி நத்தம நாயக்கர் 8 கிராமங்களில் பள்ளிகள் கட்ட இடங்களை தானமாக கொடுத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குளங்கள் அமைக்கவும், கூட்டுறவு சொசைட்டிக்காக அலுவலகம் கட்டவும் அதற்கான இடங்களை தானமாக கொடுத்துள்ளார். ஜமீன் பரம்பரையில் வந்த இவர்கள் வெளியே எந்த குடும்பங்களிலும் தங்களது வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைப்பதில்லை. திருமண விசயங்களில் மதுரை மாவட்டம் மற்றும் தேனீ மாவட்டங்களில் அங்குள்ள பாளையக்காரர்கள் குடும்பங்களில் இருந்தே பெண் கொடுப்பது, பெண் எடுப்பது போன்ற உறவு முறைகளை இன்றளவும் வைத்துக் கொள்கின்றனர். அதே போல் திருமண விழாக்களை எந்த ஒரு திருமண மண்டபத்தில் நடத்துவது இல்லை. அரண்மனைக்குள்ளேயே அதற்கென்று ஒரு பந்தல் அமைத்துக் கொண்டு திருமணங்களை நடத்திக் கொள்கின்றனர். குறிப்பாக திருமணங்களுக்கு புரோகிதர் வைத்துக் கொள்வதில்லை. இவர்களது குடும்பத்தில் மூத்தவர்கள் ஒருவரை வைத்து திருமணத்தை நடத்தி விடுகிறார்கள். முக்கியமாக இவர்களது உறவினர்களோ அல்லது வெளியாட்களோ யாராவது உயிரிழந்து விட்டால் துக்கம் விசாரிக்க செல்லும்போது சடலத்தை பார்க்க மறுத்து விடுகிறார்கள். ஜமீன் பரம்பரையில் உள்ளவர்கள் சடலத்தை பார்க்கக் கூடாது என்கிறார் திருமலைசாமி நத்தம நாய்க்கர்.

7 ஏக்கரில் அமைந்துள்ள அரண்மனையை பராமரிக்க முடிவதில்லை. அந்த காலத்தில் சேவகம் செய்வதற்கு ஏராளமானவ ர்கள் இருந்தனர். இந்த காலத்தில் அத்தனை பேரை வேலைக்கு அமர்த்திக் கொள்வதும், அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதும் முடியாத காரியமாக உள்ளது. ஆகையால் இந்த அரண்மனையை சரியாக பராமரிக்க முடிவதில்லை என்கிறார் திருமலைசாமி நத்தமநாயக்கர்.

திருப்பூர் மாவட்டம் புதிதாக உருவாகிய பின்னர் உடுமலை வட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிதாக மடத்துக்குளம் வட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதில் மெட்ராத்தி ஜமீன் மடத்துக்குளம் வட்டத்தில் சேர்ந்து கொண்டது.தற்போது மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள மெட்ராத்தி ஜமீனுக்குச் சேர்ந்த 8 கிராமங்களிலும் தற்போது வருவாய்த் துறையினர் வரி வசூல் செய்து வருகின்றன்றனர். அந்த காலத்தில் ஆங்கிலேயர்களால் ஒவ்வொரு கிராமத்திற்கு கொடுத்த வருவாய் கிராம எண்ணை அடிப்படையாக வைத்தே இன்றைக்கும் வரி வசூல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: மெட்ராத்தி அரண்மனை சின்னக்கவுண்டர் சினிமா திரைப்படம் மூலம் தமிழகத்தில் புகழ் பெற்றது. பெரிய அளவில் ஹிட்டான இந்த திரைப்படம் மூலம் சினிமா உலகில் இந்த அரண்மனையை பேச வைத்தது. இதை தொடர்ந்து ஏராளமான இயக்குனர்கள் இந்த அரண்மனையை தேடி வரத் தொடங்கினர். விஜயகாந்த் நடித்த என் ஆசை மச்சான், சத்யராஜ் நடித்த தாய்மாமன், சரத்குமார் நடித்த மூவேந்தர், அர்ஜுன் நடித்த ஏழுமலை, நெப்போலியன் நடித்த அழகர்மலை, சரத்பாபு நடத்த ஒரு பொன்னு ஒரு பையன் போன்ற தமிழ் படங்களும், இதுபோக கேரள சூப்பர் ஸ்டார்கள் திலீப் நடித்த பாண்டி படா, சுரேஷ் கோபி நடித்த ஜமீன்தார், மோகன்லால் நடித்த அலிபாய் போன்ற மலையாள படங்கள் எடுக்கப்பட்டன.

நன்றி : 

முகம் பார்க்கும் கண்ணாடி

 வாஸ்து சாஸ்திரத்தின் படி, வடக்குப் பக்கத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைப்பதும் மிகவும் நல்லது.



கண்ணாடி மாட்ட வேண்டும் என்று சொன்னதும் அதை மாட்டும் முறையையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாகவே உங்கள் வீட்டில் கண்ணாடியை மாட்டுவதாக இருந்தாலும், சுவாமி படங்களை மாட்டுவதாக இருந்தாலும், இறந்தவர்களின் படங்களை மாற்றுவதாக இருந்தாலும் சுவற்றில் ஆணி அடித்து அப்படியே மாற்றி விடக்கூடாது. அந்தக் காலங்களில் எல்லாம் சுவற்றில் ஆணி அடித்து கீழே ஒரு கட்டை துண்டை வைத்து, ஒரு கம்பியால் படங்களை கட்டி சுவற்றில் மீது படங்கள் ஓட்டி எடுக்காமல், பூமியை பார்த்தவாறு இருக்கும். அதாவது அந்த படத்தின் கீழ்ப்பகுதி மட்டும்தான் சுவற்றை தழுவி இருக்கும். அந்த காலத்தில் இறந்தவர்களின் படத்தை எல்லாம் சுவற்றின் அப்படித்தான் மாட்டி வைத்திருப்பார்கள். அப்படி வைத்தால் தான் எந்த ஒரு கெட்ட ஆற்றலும் அந்த படத்தை தாக்குக்கும் போது, அந்த அதிர்வலைகள் பூமியை நோக்கி சென்றுவிடும். வீட்டில் இருப்பவர்களை தாக்காது என்பதற்காகத்தான் படங்களை தாழ்வாக மாட்ட வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது. அடுத்ததாக தென்கிழக்கு மூலை. அக்னி மூலை என்று சொல்வார்கள்.

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...